சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மென் பொறியாளர் பார்த்திபன்- பிரியா ஆகியோரது திருமணம் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் பார்த்திபன் வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட போது காரில் வந்த கும்பல் ஒன்று அவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றது.
இதனை கண்ட பார்த்திபனின் தாயார் ஆஷா பிந்து அதிர்ச்சியடைந்து காரை தடுத்து நிறுத்த முயன்ற போது, நிற்காமல் சென்ற கார் அவர் மீது மோதிவிட்டு அதிவேகமாக சென்றது. இதில் காயமடைந்த ஆஷா பிந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் குறித்து பார்த்திபனின் மனைவி பிரியா வேளச்சேரி போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் பார்த்திபனின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், காஞ்சிபுரத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பெண் உட்பட 4 பேரை கைது செய்து பார்த்திபனை மீட்டனர்.
இந்த கடத்தலில் ஈடுபட்டது பார்த்திபனின் முன்னாள் காதலி சவுந்தர்யா தலைமையிலான குழு என்பது தெரிய வந்தது. கடத்தப்பட்ட பார்த்திபன், கல்லூரியில் படிக்கும் போது ராணிப்பேட்டையை சேர்ந்த சவுந்தர்யா என்பவரை 7 வருடங்களாக காதலித்து வந்ததும், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தனது பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் சுமுகமாகப் பிரிந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து பார்த்திபன் கடந்த ஜூலை மாதம் பிரியாவை திருமணம் செய்துள்ளார். ஆனால் சவுந்தர்யா பார்த்திபனுடன் ஏற்பட்ட காதலை மறக்க முடியாமலும் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் பார்த்திபனை கடத்தி திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்த சவுந்தர்யா வந்ததாக கூறப்படுகிறது. தாயார் உமா, துணை ராணுவ வீரரும் மாமன் மகனுமாகிய ரமேஷ், நங்கநல்லூரைச் சேர்ந்த கார் ஓட்டுனரான சித்தப்பா சிவகுமார் ஆகியோருடன் சேர்ந்து பார்த்திபனை காரில் கடத்தி இருப்பதும் தெரிய வந்தது.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று பார்த்திபனை மிரட்டி சவுந்தர்யா திருமணம் செய்ய முயன்றது தெரிய வந்தது. செல்போன் சிக்னல் உதவியுடன் வேளச்சேரி போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
சவுந்தர்யா, அவரது தாயார் உமா, உறவினர்கள் ரமேஷ் மற்றும் சிவகுமார் ஆகிய நான்கு பேர் மீது ஆயுதங்களால் காயம் விளைவித்தல், கடத்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தற்போது பார்த்திபனை விட்டு சவுந்தர்யா பிரிந்து விடுவதாக கூறுவதால் வேளச்சேரி போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.