பணச்சலவை தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறையினர், பரமத்தி வேலூரில் கைப்பற்றிய 60 நிலங்களுக்கான சொத்து ஆவணங்கள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜியை 12-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து செந்தில் பாலாஜியை புழல் சிறையிலிருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சாஸ்திரி பவனுக்கு அமலாக்கத்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இங்குள்ள விசாரணை அறையில் ஒரு பெண் அதிகாரி உட்பட 3 அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 3ம் தேதி செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவராக கருதப்படும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த திமுக நிர்வாகி வீரா சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, வீரா சாமிநாதனின் உறவினரான சாந்தியின் ஓட்டுநர் மூலம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூருக்கு கொடுத்து அனுப்பிய 22 லட்ச ரூபாய் ரொக்கம், கணக்கில் வராத 16.6 லட்ச ரூபாய் அளவிலான விலைமதிப்பு மிக்க பொருட்கள் மற்றும் 60 நிலங்களுக்கான சொத்து ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த 60 நில ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கணக்கில் வராத பணம் யாரிடமிருந்து பெறப்பட்டது?, யார் யார் மூலம் பணம் பெறப்பட்டது?, எந்தெந்த காலக்கட்டங்களில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் உள்ள செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோகுமார் வீட்டில் கடந்த மே மாதம் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, விசாரணைக்கு வந்த அதிகாரிகளுடன் அவரது ஆதரவாளர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அப்போதிலிருந்து தலைமறைவாக இருந்து வரும் அசோக் குமார் குறித்தும் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.