சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் இரவில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடரும் தாக்குதல் சம்பவங்களால் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
24 மணிநேரமும் மக்கள் நடமாட்டம் நிறைந்த இடமாக இருக்கிறது தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் ரயில் நிலையப் பகுதி.
இந்த நிலையில் சனிக் கிழமை இரவு 10 மணிக்கு செங்கல்பட்டைச் சேர்ந்த 52 வயதான தமிழ்ச் செல்வி என்பவர், மின்சார ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அவரை நெருங்கிய 30 வயது இளைஞர் ஒருவர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் வலது கையில் வெட்டு விழுந்து தமிழ்ச்செல்வி நிலைகுலைந்து போனார்.
சகப் பயணிகள் சுதாரித்து பிடிப்பதற்குள், அந்த மர்ம நபர் கத்தியுடன் தப்பியோடிவிட்டார். பின்னர் தமிழ்ச்செல்வி, ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தன்னை தாக்கிய நபரை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்று அவர் தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் கூறியுள்ளார்.
தனது பேத்திக்கு முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிக்காக தாம்பரத்திற்கு சென்று புத்தாடை, பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி விட்டு திரும்பியதாகவும், சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் பெருங்களத்தூரில் இருந்து ரயிலில் செங்கல்பட்டு செல்வதற்காக காத்திருந்ததாகவும் தமிழ்ச்செல்வி கூறியுள்ளார்.
ரயில் நிலையத்தில் சி.சி.டி.வி கேமரா இல்லாததால், தாக்கியவர் குறித்து தமிழ்ச்செல்வி தெரிவித்திருந்த அடையாளங்களின் அடிப்படையில் தேடி வந்த போலீஸார், சுப்பிரமணி என்பவரை கைது செய்தனர்.
திருவண்ணா மலையைச் சேர்ந்த சுப்பிரமணி அந்த பகுதியில் சுற்றி வந்ததோடு, மற்றவர்களிடம் யாசகம் பெற்று மது அருந்தி வருபவர் எனத் தெரிவித்த போலீஸார், மதுபோதையில் தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்தியதாக தெரிவித்தனர். சுப்பிரமணி பையில் வைத்திருந்த கத்தியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
2016 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கொலை நடந்ததைத் தொடர்ந்து, நிர்பயா திட்டத்தின் கீழ் 19 ரயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி பாதுகாப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால் அந்த பணிகள் இன்னமும் முழுமை பெறவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பிறகு பரங்கிமலையில் சத்யா என்ற கல்லூரி மாணவி; இந்திரா நகரில் ப்ரீத்தி என்ற இளம்பெண்; சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில், சமீபத்தில் நடந்த ராஜேஸ்வரி என்ற பெண் வியாபாரிக் கொலை என்று குற்றங்கள் தொடர்கதையாகி உள்ளன. ஏன், ரயிலில் பயணித்த பெண் காவலருக்கே பாதுகாப்பு இன்றி, தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தேறியது.
ரயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை அமைத்து, முக்கிய நேரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் ரோந்துப் பணிகளை போலீசார் அதிகப்படுத்தினால் மட்டுமே அச்சுறுத்தல்களை தடுக்க முடியும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு...