சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. பருவமழைக் காலம் வரவுள்ள நிலையில், இந்த சாலைகளை பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு ....
குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் சென்னை மாநகர சாலைதான் இது.. முக்கிய சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் என நகரில் பல இடங்களில் சாலைகளின் நிலைமை இப்படித்தான் உள்ளன.
பருவமழைக்கு பின் கடந்த ஜனவரி மாதத்தில் சாலை போடும் பணிகள் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் அறிவித்திருந்த நிலையில், பழுதடைந்ததாக கணக்கிடப்பட்ட 1,022 சாலைகளில் பராமரிப்பு பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது....
மணப்பாக்கம், கொட்டிவாக்கம், வளசரவாக்கம், பாலவாக்கம் போன்ற இடங்களில் சாலைகள் நீண்டகாலமாக சேதமடைந்து காணப்படுவதாகவும், வாகனங்களில் பயணிக்கும் போது அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தூசி பறக்கும் சாலைகளில் வாகனங்களில் செல்வதால் சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
நந்தம்பாக்கத்தில் குடிநீர் வாரியம் மற்றும் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் பிரதான சாலைக்கு பதிலாக மணப்பாக்கம்- குன்றத்தூரை இணைக்கும் உட்புற சாலையை அதிகளவில் வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். பழுதான இந்த சாலையில் செல்வதால் வாகன உதிரி பாகங்களை அடிக்கடி மாற்ற வேண்டியிருப்பதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
கடந்த மூன்றாண்டுகளாக இந்த சாலைகள் மோசமாக இருப்பதாகவும், மழை காலங்களில்
அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதாகவும் கூறும் அப்பகுதி மக்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடிவதில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்
வீட்டுக்குழாய் இணைப்புகளை வழங்கவும், சென்னை குடிநீர் பணிகளுக்காகவும் தோண்டப்பட்ட சாலைகளில் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், அந்த சாலைகள் மேலும் மோசமடைந்திருப்பதாக கூறுகின்றனர் கொளப்பாக்கம் பகுதிவாசிகள்
வளசரவாக்கம் பகுதியில் 2 முதல் 3 கிலோமீட்டர் தூரத்தை இருசக்கர வாகனத்தில் பத்தே நிமிடங்களில் முன்பு கடக்கமுடிந்த நிலையில், தற்போது ஒரு மணி நேரம் ஆவதாகக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் சவாரிக்கு வரவே யோசிக்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள்.
மணப்பாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளைப் பொறுத்தவரை சாலைகளை சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், பள்ளம் நிறைந்த சாலைகள் அதற்குள் சீரமைக்கப்பட்டுவிடுமா என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது..