சென்னை தாம்பரம் பகுதியில் மாயமான கல்லூரி மாணவி, பல்லாவரம் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் இன்ஸ்டாகிராமில் காதலித்து வந்த டியூசன் மாஸ்டரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
சென்னை பல்லாவரம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் பாலமுருகன் - விமலா தம்பதியின் மூத்த மகள் ஹேமிதா. 19 வயதான இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
அதே பகுதியில் உள்ள டியூஷன் சென்டரில் படித்து வந்த ஹேமீதாவை, 26 வயதான டியூஷன் மாஸ்டர் அஜய் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர படிக்கும் வயதில் காதல் எதற்கு என ஹேமிதாவை கண்டித்துள்ளனர். ஒரு சில மாதங்களாக ஹேமிதா, அஜய்யுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகின்றது.
பின்னர், கல்லூரிக்கு செல்லும்போது அஜயும் ஹேமிதாவும் தங்கள் காதலை தொடர்ந்ததை அறிந்த பெற்றோர், ஹேமிதா பயன்படுத்திய செல்போனை வாங்கி வைத்துக் கொண்டனர். இதனால் இருவரும் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் அஜய் தன் காதலி ஹேமிதாவுக்கு புதியதாக செல்போனை வாங்கிக் கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக இருவரும் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
கடந்த 27 ஆம் தேதி ஹேமிதா வீட்டில் இருந்து மாயமானதாக பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தாம்பரம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே இளம்பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், தகவலின் அடிப்படையில் அங்கு சென்று அங்க அடையாளங்களை பார்த்த போது காணாமல் போன ஹேமிதாவின் உடல் என தெரியவந்ததையடுத்து பதறித்துடித்த அவரது தாய் விமலா பேச இயலாமல் விக்கித்து போனார்..
அடையாளம் தெரியாத அந்த பெண்ணின் உடல் மாயமான ஹேமிதா என்பது தெரியவந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவத்தன்று அதிகாலை சுமார் 4:00 மணியளவில் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள குரோம்பேட்டை ரயில் நிலையம் வந்த ஹேமிதா, திருநெல்வேலியில் இருந்து எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே தங்கள் மகள் ஹேமிதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில், ஹேமிதாவை காதலித்து வந்த அஜயை, பல்லாவரம் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலனுடன் தனியாக செல்போனில் பேசி வந்த ஹேமிதா யாருடைய அழைப்பின் பேரில் வீட்டில் யாருக்கும் தெரியாமல் அதிகாலை நான்கு மணிக்கு வெளியே சென்றார் ? தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றால் எதற்காக வீட்டை விட்டு 2 கிலோ மீட்டர் தூரம் வந்து ரெயிலில் பாய வேண்டும் ? அவராக இந்த முடிவை தேடிக் கொண்டாரா ? அல்லது அவரை யாராவது ஓடும் ரெயிலுக்குள் தள்ளிவிட்டார்களா ? என்பது குறித்து காதலனான டியூசன் மாஸ்டர் அஜய்யின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்