ரயில் நிலையங்களில் பேட்டரி கார், வீல் சேர், தனி டிக்கெட் கவுன்ட்டர் என போராடிப் பெற்ற சலுகைகளை அனுபவிக்க முடியாத நிலை உள்ளதால் ரயில் பயணம் தங்களுக்கு எட்டாக்கனியாகி விடுமோ என மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறைந்த கட்டணத்தில் வசதியாக பயணிக்கலாம் என்பதால் பெரும்பாலானோரின் விருப்பத் தேர்வாக அமைந்துள்ளன ரயில்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு எவ்வித சிரமும் இன்றி ரயில் ஏற வேண்டும் என்பதற்காக ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
பேட்டரி வண்டிகள், சக்கர நாற்காலிகள் போன்ற அனைத்தும் ரயில் நிலையங்களில் இருந்தாலும் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக தெரிவித்துள்ளனர், மாற்றுத்திறனாளர்கள்.
ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் இயக்கப்படும் பேட்டரி கார்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம், 10 ரூபாய். ஆனால் கூடுதல் பணம் கேட்டு நடைமேடையிலேயே ஊழியர்கள் சிலர் தங்களை காக்க வைப்பதாக கூறுகின்றனர், மாற்றுத் திறனாளிகள்.
எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட் கவுன்டர்கள் ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி ஆண்டுக்கணக்கில் மூடப்பட்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகள் வீல் சேர்களை பயன்படுத்த வேண்டும் என்றால் அவற்றை நிலைய மேலாளர் அறையில் இருந்து எடுத்து வர வேண்டும். அதை பயன்படுத்தி ரயிலில் ஏறிய பின் மீண்டும் அவற்றை நிலைய மேலாளர் அறைக்கு கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுவதாக கூறுகின்றனர், மாற்றுத்திறனாளிகள். தனியாக வரும் மாற்றுத் திறனாளிகள் இதை எப்படி கடைபிடிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ரயில்வே சேவைகள் தொடர்பாக புகார் தெரிவிக்க 1-9-3 என்ற எண் உள்ளது. இதை தொடர்பு கொண்டால் ஒரு நிமிடத்திற்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. புகார்களை பதிவிடுவதற்காக உருவாக்கப்பட்ட செயலியை உபயோகப்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர், மாற்றுத்திறனாளிகள்.
இத்தனை சிரமங்களை கடந்து ரயில் ஏறினால், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே காவலர்களும் அமர்ந்து கொண்டு தங்களுக்கு இருக்கை வழங்குவதில்லை என்றும் கூறுகின்றனர்.
இது குறித்து ரயில்வே நிர்வாகத்தில் புகாரளித்தால், சேருமிடத்தை ரயில் நெருங்கும் போது இருக்கைகள் காலியாக இருப்பதை புகைப்படம் எடுத்து ரயில்வே காவலர்கள் சமாளித்துவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர், மாற்றுத்திறனாளிகள்.
அரசு வழங்கும் சலுகைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில் அதிகாரிகள் கடமையாற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.