வேலூர் துணிக்கடை ஒன்றில் சாதாரண உடையில் நின்றிருந்த பெண் தலைமைக் காவலரை, கடை ஊழியர் என நினைத்து அவரிடம் ஆடையை எடுத்துக் கொடுக்க கேட்டு தகராறில் ஈடுபட்ட 4 குடிமகன்களை போலீசார் கைது செய்தனர்
குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் தலைமை காவலராக வேலைப் பார்த்து வருபவர் கீதா, இவர் துணி வாங்குவதற்காக அழிஞ்சிகுப்பம் பகுதியில் உள்ள வட மாநில இளைஞர் நடத்தும் துணிக்கடைக்கு சாதாரண உடையில் சென்றிருந்தார்.
அங்கு நின்று ஆடைகளை பார்த்துக் கொண்டிருந்த போது போதை ஆசாமிகள் 4 பேர் கடைக்கு வந்தனர். அவர்களில் ஒருவர் கீதாவை துணிக்கடை பெண் ஊழியர் என நினைத்து ஏம்மா உன் சைசுக்கு ஒரு நைட்டி எடுத்து போடும்மா... என்று கூறியதால் , ஆத்திரம் அடைந்த கீதா அவர்களை திட்டியதாக கூறப்படுகின்றது.
பதிலுக்கு அந்த போதை ஆசாமிகளும் ஆபாசமாக திட்டி வம்பிழுத்ததால் அவர்களை கீதா தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனை அருகில் நின்றிருந்த நபர் தடுத்து அடிக்க பாய்ந்தார்
எங்கே தங்களை போலீசாரிடம் போட்டுக் கொடுத்து விடுவாரோ என்று ஏட்டு கீதாவை 4 பேரும் போட்டிபோட்டு தாக்க முயன்றனர். கடை உரிமையாளர் ஜி... வேணாம் ...ஜி என்று கையெடுத்து கும்பிட்டு தடுத்தார்
கடைக்காரர் கும்பிட்டு விழுவதை பார்த்து அடங்க மறுத்து கொந்தளித்த குடிகாரர்கள் தங்கள் வாய்க்கு வந்தபடி பேசி ஏட்டம்மாவை அடிக்க எத்தனித்தனர்.
உஷாரான ஏட்டு கீதா கடையின் உட்புறமாக போய் நின்றவாறு போலீசுக்கு தகவல் கொடுத்தார். ஒரு வழியாக கடை உரிமையாளர் அவர்களை சமாதானப்படுத்தினார்.
இதுகுறித்து கீதா அளித்த புகாரில் மேல்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து குடிகார கூட்டாளிகளான சத்தியமூர்த்தி, குணசேகரன், பிரபாகரன், தினகரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
தவறாக அழைத்து விட்டதாக ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இவ்வளவு களேபரங்களுக்கும் இடமில்லை என்ற நிலையில் போதை அவர்களின் பாதையை மாற்றியதால் வம்பிழுத்த 4 பேரும் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்