மின்சார வாரியத்தின், பல்வகை மின்விநியோக டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ய விடப்பட்ட டெண்டர்கள் மூலம், அரசுக்கு சுமார் 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக, அறப்போர் இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில், அறப்போர் இயக்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கடந்த 2 ஆண்டுகளில், பல்வகை மின்விநியோக டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் டெண்டர்கள் ஒவ்வொன்றிலும் பங்கேற்ற 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஒரே விலையை குறிப்பிட்டிருப்பதாக, அறப்போர் இயக்கத்தினர் குற்றம்சாட்டினர்.
மத்திய அரசின், GEM எனப்படும் அரசு இ-சந்தை தளத்தில், டிரான்ஸ்பார்மர்களுக்கு குறிப்பிட்டுள்ள விலையைக் காட்டிலும், ஒவ்வொரு டிரான்பார்மர்களுக்கும், கூடுதலாக 3 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் விலை வைத்து, டெண்டர்கள் கோரப்பட்டிருப்பதாக, அறப்போர் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
டெண்டரில் பங்கேற்றுள்ள நிறுவனங்கள் ஒரே விலையை குறிப்பிட்டிருப்பதை, கூட்டுச்சதி என்று கூறும் அறப்போர் இயக்கத்தினர், இதுகுறித்தும், டெண்டர் கோரிய நிறுவனங்கள் குறித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை, பிற புலனாய்வு அமைப்புகள், விசாரணை நடத்த வேண்டும் என்றும், கேட்டுக்கொண்டுள்ளனர்.
மின்வாரிய டெண்டர் விவகாரத்தின் பின்னணியில் காசி என்பவரது பெயரை குறிப்பிடும் அறப்போர் இயக்கத்தினர், அவர், மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி வீட்டிற்கு, வந்துசென்ற வீடியோ காட்சிகளையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
மின்வாரிய கொள்முதல் பிரிவு நிதி கட்டுப்பாட்டாளரான காசி, அமைச்சர் வீட்டில் இருந்தே அனைத்தையும் தீர்மானித்ததாக அறப்போர் இயக்கத்தினர் கூறியுள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு, பொதுநலனுக்கு எதிராக செயல்படுவதாக கூறி தாம் வகித்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட காசி, 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு, மின்வாரிய கொள்முதல் பிரிவு நிதி கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டார் என்றும், அறப்போர் இயக்கத்தினர் கூறுகின்றனர்.
மின்சார வாரியத்தில் இதுபோன்ற டெண்டர்கள் மூலம் அரசு ஏற்படும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்புகளை சமாளிக்க, மின்சார கட்டணங்களை உயர்த்துவதாக, தாங்கள் ஏற்கனவே குற்றச்சாட்டுகளை வைத்தபோது, செந்தில்பாலாஜி அனுப்பிய நோட்டீசுக்கு உரிய ஆதாரங்களுடன் விளக்கமும் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஆதார ஆவணங்களுடன், இதுவரை பல புகார்களை, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுத்திருப்பதாகவும், ஆனால், வழக்குப்பதிவு செய்ய தொடர்ந்து காலதாமதம் ஆகி கொண்டே இருப்பதாகவும், அறப்போர் இயக்கத்தினர் கூறுகின்றனர்.