மளிகைப் பொருட்கள் அனைத்தும் 70 சதவீதம் விலை உயர்ந்துள்ள நிலையில் அமைச்சரின் மாமன்னன் திரைப்படமா மக்களின் பசியைப் போக்கும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். காவிரியில் ஜூன் மாதத்திற்கு உரிய நீரை பெறாமல் முதலமைச்சர் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டத்துக்குப் பின் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியா முழுவதுமுள்ள அரசியல் தலைவர்களை ஒருங்கிணைக்க போவதாக கூறும் முதலமைச்சர் காவிரியில் உரிய நீரைப் பெற தோழமைக் கட்சியான கர்நாடக காங்கிரசிடம் ஏன் பேசவில்லை என்று வினவிய எடப்பாடி பழனிசாமி, ஜூன் மாதத்திற்கு உரிய நீரை பெறாமல் முதலமைச்சர் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது என்று பிரதமரே கூறியதை சுட்டிக்காட்டிக்காடிய இ.பி.எஸ்., கடந்த 2 ஆண்டில் தமிழ்நாடு மருத்துவத்துறையில் சீரழிந்துவிட்டதாக சாடினார்.
மாமன்னன் படம் தாழ்த்தப்பட்டோர் இடையே எழுச்சியை ஏற்படுத்தியதை போன்ற பொய் தோற்றத்தை ஏற்படுத்துவதாக கூறிய அவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தனபாலின் சட்டையை கிழித்து இருக்கையை உடைத்து , கீழே தள்ளிய தி.மு.க.வினருக்கு தாழ்த்தப்பட்டோர் குறித்து பேச தகுதி உண்டா என்று கேட்டார். மளிகைப் பொருட்கள் அனைத்தும் 70 சதவீதம் விலை உயர்ந்துள்ள நிலையில் அமைச்சரின் மாமன்னன் திரைப்படமா மக்களின் பசியைப் போக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதாக ஏற்கனவே கூறிவிட்டதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வரும்போது எந்தெந்த கட்சியோடு கூட்டணி என்பது குறித்து கூறுவோம் என்றார்.
கடந்த ஓராண்டில் அதிமுக 3, 4 ஆக உடைந்து உறுப்பினர் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது என்று விமர்சிக்கப்பட்டதாக அவர் கூறினார். அதை மாற்றி அதிமுகவின் உறுப்பினர் எண்ணிக்கையை 1 கோடியே 60 லட்சமாக உயர்த்தி இன்று சரித்திரச் சாதனையைப் படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பொது சிவில் சட்டம் குறித்த கேள்விக்கு, அது குறித்த அ.தி.மு.க.வின் நிலைப்பாடு 2019 தேர்தல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தப்பட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
முன்னதாக, 'வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு' என்ற தலைப்பில் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள அ.தி.மு.க மாநாட்டின் லோகோவை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.