அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் பலமணி நேரம் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது நெஞ்சுவலிப்பதாக செந்தில்பாலாஜி தெரிவித்ததை அடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை டி.ஜி.எஸ். தினகரன் சாலையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வசித்து வரும் அரசு பங்களாவில் நேற்று காலை சுமார் 8 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 18 மணி நேரமாக நீடித்த சோதனைக்குப் பின் அதிகாலை 2 மணியளவில் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்து சென்றனர். அப்போது அவர் நெஞ்சுவலிப்பதாக கதறித் துடித்தார்.
இதையடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அவரை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர். உடனடியாக செந்தில்பாலாஜி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து செந்தில்பாலாஜியின் உடல்நலம் குறித்து விசாரிக்க அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி நலமுடன் இருப்பதாகவும், அவர் மீதான வழக்கை சட்டப்படி திமுக எதிர்கொள்ளும் என்றும் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை என்றும், மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.
செய்தியாளர்களை சந்தித்த திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ எம்பி, செந்தில் பாலாஜி கைதில் விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்றார்.
இதனிடயே, தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் அறையிலும், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவருடைய வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 18 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப் பின், 3 தோல் பைகள், இரண்டு கைப்பைகளில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும், ஒரு ஹார்ட் டிஸ்க் மற்றும் ஒரு மடிக்கணினியை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், எந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து,ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட வல்லுநர்கள், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.