தாம்பரம் அருகே பிரிந்து வாழும் கணவரை வீட்டுக்குள் பூட்டி விட்டு, பெண் ஒருவர் தனது மகனை தூக்கிச் சென்றுள்ளார். தாயுடன் வர மறுத்ததால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட மகனை மீட்டுத் தரக் கோரி போலீசில் கண்ணீருடன் புகார் செய்துள்ளார் அந்த கணவர்...
சாலையில் இந்தப் பெண் அடித்து இழுத்துச் செல்வது, அவர் பெற்ற மகனை. அப்பாவை விட்டுவிட்டு வரமாட்டேன் என்று சொன்னதால் மகனை ரோட்டிலேயே சாத்தி தூக்கிச் சென்றார் இந்தப் பெண்.
தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் செம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர், ஷரீத். இவருக்கும் சுபைதா பேகம் என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 7 வயதில் மகன் உள்ளான். கருத்து வேறுபாட்டால் 6 மாதங்களாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழும் நிலையில், மகன் தந்தையுடன் வசித்து வருகிறான். அவனை தன்னிடம் ஒப்படைக்கும்படி சுபைதா பேகம் சேலையூர் காவல் நிலையத்தை அணுகினார்.
இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து விசாரித்த போது, தந்தையுடன் இருக்கவே தான் விரும்புவதாக ஏழு வயது மகன் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து சுபைதா பேகத்திடம், சட்டப்படி நீதிமன்றத்தில் அணுகி குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறும், எந்த ஒரு பிரச்சனைக்கும் போக வேண்டாம் என்றும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர் போலீசார்.
இந்த நிலையில் தனது உறவினர்களுடன் ஷரீத் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அதிரடியாக சென்ற சுபைதா, வீட்டுக்குள்ளே ஷரீத்தை அறை ஒன்றுக்குள் தள்ளி பூட்டி விட்டு மகனை தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்.
அப்பாவுடன் தான் இருப்பேன் என்று கூறி கூட வர மறுத்து தப்பி ஓட முயன்ற மகனை அடித்து இழுத்துச் சென்ற ரஷிதா, மகனை குண்டு கட்டாகக் தூக்கிக் கொண்டு தெரு முனையில் தயாராக இருந்த கார் ஒன்றில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
வீட்டுக்குள் அடைபட்டு இருந்த ஷரீத்தின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பூட்டை உடைத்து வெளியே கூட்டி வந்தனர். உடனடியாக சேலையூர் காவல் நிலையத்திற்கு சென்ற ஷரீத், தன் மகனை காப்பாற்றி தருமாறு போலீசாரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். சுபைதா தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.