கணவன் மனைவி பிரச்சனையை பேசித்தீர்க்க சென்ற இடத்தில் வீட்டுக்குள் வைத்துப்பூட்டி எதிர்தரப்பினர் தாக்கியதாக கூறி, கர்ப்பிணி பெண் வழக்கறிஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான ஜெயகிருஷ்ணனுக்கும், அவரது மனைவி அர்ச்சனாவிற்கும் இடையே 4 ஆண்டுகளாக குடும்ப தகராறு இருந்து வருகிறது. இதுகுறித்து, பேசுவதற்காக இருதரப்பினரும் தனித்தனியாக வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஜெயகிருஷ்ணன் வீட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடந்த போது, அர்ச்சனா தரப்பில் பேசுவதற்காக 4 மாத கர்ப்பிணியான வழக்கறிஞர் சபீதா சென்றுள்ளார். இருதரப்பினருக்குமான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறிய நிலையில், ஒருதரப்பினரை வீட்டிற்குள் வைத்து மற்றொரு தரப்பினர் பூட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தன்னை எதிர்தரப்பினர் தாக்கி விட்டதாக வீடியோ வெளியிட்ட சபீதா, பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்ததோடு, பூந்தமல்லி போலீசில் புகாரும் அளித்தார்.
எதிர்தரப்பினரும் சபீதா மீது புகார் அளித்த நிலையில், இருதரப்பு புகார் மீதும் போலீஸார் தனித்தனியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். இந்நிலையில், தனது புகார் மீது உரிய விசாரணை நடத்தப்படவில்லையென காவல் நிலையத்திற்கே சென்று, தனது தாயாருடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார் வழக்கறிஞர் சபீதா.
ஒருவர் புகார் அளித்தால் என்ன மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படுமென உதவி ஆய்வாளர் சுரேஷ் விரிவாக விளக்கமளித்தார்.
வழக்கறிஞருக்கே காவல் நிலையத்தில் நியாயம் கிடைக்கவில்லையென்றால் சாமான்ய மக்களின் நிலை எப்படியிருக்கும் என கேள்வி எழுப்பினார் சபீதா