சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க சேப்பாக்கம் மைதானம் வெளியே மழையில் விடிய விடிய ரசிகர்கள் காத்திருந்தனர். நூற்றுக்கணக்கான ரசிகர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் மீறி டிக்கெட்டுகளை வாங்க முண்டியடித்த நிலையில், லேசான தடியடி நடத்தி போலீசார் அவர்களை கலைத்தனர்..
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் சனிக்கிழமை சென்னை - மும்பை இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை வாங்க நேற்றிரவு முதலே ரசிகர்கள் மைதானத்தில் வந்து குவியத் தொடங்கினர்.
இரவு பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர். போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தகர்த்து எறிந்துவிட்டு ஒருவரை ஒருவர் முண்டியடித்து கவுண்ட்டர் பகுதியை நோக்கி முன்னேறியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேறு வழியின்றி லேசாக தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
சேப்பாக்கம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சில உள்ளூர் நபர்கள் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்ததால், போலீசார் அவர்களையும் அடையாளம் கண்டு விரட்டியடித்தனர்.
இதனிடையே டிக்கெட் வாங்குவதற்காக முண்டியடித்த கூட்டத்தில் ஜாம்பஜார் பகுதியில் மூட்டைத் துக்கும் தொழிலாளர் ராஜா என்பவர் திடீரென வலிப்பு வந்து மயங்கிச் சரிந்தார். போலீசார் அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்து, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த பெண் ஒருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மயக்கமடையும் நிலைக்குச் சென்ற மற்றொரு பெண்ணுக்குத் தண்ணீர் கொடுத்து போலீசார் ஆசுவாசப்படுத்தினர்.
சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் டிக்கெட் விநியோகத்துக்கு முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என ரசிகர்கள் குற்றம்சாட்டினர். அதனை மறுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, அடுத்த முறை டிக்கெட்டுகளை எளிமையாகப் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய சி.எஸ்.கே நிர்வாகத்திடம் முறையிடப்படும் எனத் தெரிவித்தார்.