ரசாயனங்களை அதிகளவு பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ள உணவு பாதுகாப்புத் துறையினர், இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
முக்கனிகளில் முதல் கனியான மாம்பழம் தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் விளைவிக்கப்படுறது. இந்த மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் விற்பனைக்காக கடைகளுக்கு வரும் மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேடு பழ சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறையினர், ரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிருந்த 7 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு அழித்தனர்.
மக்கள் விரும்பி உண்ணும் மாம்பழங்கள் ஏன் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுகிறது என்ற கேள்விக்கு, நன்கு முற்றிய மாங்காய்கள் இயற்கையாக பழக்க ஒரு வாரம் முதல் 10 நாட்கள் எடுத்துக் கொள்ளும். விரைவாக பழுக்க வைப்பதற்காக சில ரசாயனங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. அந்த ரசாயனங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு பயன்படுத்தினால் பழுப்பதற்கு 3 நாட்களாகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக அதனை பயன்படுத்தும் போது 3 மணி நேரத்திலேயே மாங்காய் வெம்பி விடுகிறது. கைகளுக்கு வந்த மாங்காயை விற்பனை செய்து பணமாக்குவதற்காகவே இந்த ரசாயனங்கள் அதிகளவு பயன்படுத்தப்படுவதாக உணவுத்துறையினர் தெரிவித்தனர்.
ரசாயனங்களைக் கொண்டு பழக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவதால் வயிறு, கண் எரிச்சல் முதல் புற்றுநோய் வரையிலான உடல் உபாதைகள் ஏற்படுமெனவும் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிர்ச்சி விளக்கமளித்தனர்.
இயற்கையான முறையில் பழுத்த பழங்களை முகர்ந்து பார்த்து வாசனை மூலமாகவே கண்டறியலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளனர் உணவு பாதுகாப்புத்துறையினர்.
கார்பைடு கற்கள், எத்தீபான் போன்ற ரசாயனங்களை அதிகளவு பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைத்த 20 கடைகளின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ள உணவு பாதுகாப்புத்துறையினர் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.