சென்னை திருவொற்றியூரில் அரசு மாநகரப் பேருந்தை ஓட்டிச்சென்ற ஓட்டுனர் திடீரென மயக்கம் அடைந்த நிலையில், சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக இறங்கினர். பயணிகள் அளித்த தகவலின் பேரில், மயங்கிய ஓட்டுனரை பத்திரமாக மீட்டு போக்குவரத்து போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றினர்.
சென்னையை அடுத்த பூந்தமல்லி நசரத்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி செல்லக்கூடிய 101 என்ற எண் கொண்ட அரசு மாநகரப் பேருந்தின் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
புதன்கிழமை மதியம் திருவொற்றியூர் பேருந்து பணிமனையில் இருந்து பூந்தமல்லிக்கு பேருந்தை ஓட்டிச் சென்றபோது ராயபுரம் சூரியநாராயணன் சாலை அருகே ஓட்டுனர் கார்த்திகேயனுக்கு திடீரென்று லோ பிபியால் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மயங்கி சரிவதை கண்ட பயணிகள் பதறினர்.
இதனை உணர்ந்த ஓட்டுநர் கார்த்திகேயன், வேகத்தை குறைத்து பேருந்தை பத்திரமாக சாலை ஓரம் நிறுத்தினார். பேருந்தில் இருந்து இறங்கிச்சென்ற பயணிகள், அங்கிருந்த போக்குவரத்து போலீசாரிடம் இந்த தகவலை தெரிவித்தனர்.
ராயபுரம் உதவி காவல் ஆய்வாளர்கள் சிவா மற்றும் மதன் முதல் நிலைக் காவலர் செல்வராஜ் ஆகியோர் விரைந்து சென்று பார்த்த போது பேருந்தின் பின்னிருக்கையில் அரை மயக்கத்தில் படுத்துக் கிடந்தார் கார்த்திகேயன். அவரை எழுப்பி கைத்தாங்கலாக பேருந்தில் இருந்து கீழே இறக்கினர்
ஆம்புலன்ஸுக்காக தாமதிக்காமல் ஓட்டுனர் கார்த்திகேயனை தங்களது ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர் . பின்னர் ஓட்டுநர் கார்த்திகேயனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தேவையான முதல் உதவி சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினர்.
தனக்கு மயக்கம் வந்த நிலையிலும் பேருந்தை ஓரமாக நிறுத்தி பயணிகளை பத்திரமாக இறக்கி விட்ட ஓட்டுனரின் சேவை பாராட்டதக்கது என்றால், பேருந்து ஓட்டுநரை மீட்டு தக்க நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து காப்பாற்றிய போக்குவரத்து போலீசாரின் மனித நேயம் போற்றத்தக்கது.