சென்னை கோடம்பாக்கத்தில் அடாவடி அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர், நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்ததோடு மட்டுமல்லாமல், காரில் வந்த மருத்துவரை அவரது குடும்பத்தினர் முன்பு ஆபாசமாக பேசி கடுமையாக தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த தனியார் மருத்துவர் சிவா. கடந்த 11-ஆம் தேதி கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் டியூஷன் சென்டரில் இருந்து மகளை அழைத்துக்கொண்டு தனது மனைவியுடன் காரில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு காரை இயக்கிய போது மாநகரப் பேருந்து ஒன்று காரின் பின்புறத்தில் உரசியதாக கூறப்படுகிறது.
பேருந்து ஓட்டுநரை நோக்கி பார்த்து போகக்கூடாதா ? என்று சத்தம் போட்டு விட்டுசென்ற மருத்துவர் சூப்பர் மார்க்கெட் அருகில் பொருட்களை வாங்குவதற்காக காரை நிறுத்திவிட்டு தனது மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த போது காரின் மீது மோதிய 17 டி என்ற மாநகரப் பேருந்து காரை முந்திச்சென்று சாலையின் நடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதில் இருந்து இறங்கிய நடத்துனரும், ஓட்டுநரும் அந்த வழியாக வந்த மற்ற மாநகரப் பேருந்துகளையும் சாலையில் நிறுத்த சொல்ல, அவர்களும் அப்படியே பேருந்துகளை நிறுத்திவிட்டு காரில் அமர்ந்திருந்த மருத்துவர் சிவாவிடம் சென்று ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்துள்ளனர்.
மருத்துவர் முகத்தில் எச்சிலை உமிழ்ந்து, பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
மற்ற வாகன ஓட்டிகள், பயணிகள் தடுத்ததால் அவரை எச்சரித்துவிட்டு பேருந்தில் சென்று ஏறிய ஓட்டுனரிடம் ஏம்பா இப்படி அடிக்கிறீங்க என்று தட்டிக்கேட்ட ஒரு பெண்ணை ஆபாசமாக திட்டிவிட்டு பேருந்தை ஓட்டிச்சென்றார் அந்த ஓட்டுனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த மருத்துவரை அலைக்கழித்த போலீசார் , மறுநாள் 12-ஆம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் உங்கள் மீது புகார் அளித்துள்ளனர், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்குதல் நடத்துவதற்கு தூண்டியதாக உங்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டி இருக்கும் என மிரட்டி உள்ளார்.
நேரில் சென்ற தன்னிடம், தொழிற்சங்கத்தினர் முன்னிலையில் போலீசார் பஞ்சாயத்து செய்ததாக பாதிக்கப்பட்ட மருத்துவர் சிவா வேதனை தெரிவித்தார்.
புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதாக எழுதிக்கொடுக்காவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று அச்சுறுத்தியதால், அவர்கள் சொன்னதை எழுதி கொடுத்து விட்டு வந்ததாகவும், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கும், பெண்ணை ஆபாசமாக பேசியதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மருத்துவர் சிவா தெரிவித்துள்ளார்.
காவல் உயர் அதிகாரிகள் இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பர்ப்பு.