தமிழ்நாட்டில் குடிபோதையால் மேலும் ஒரு உயிர் பலியாகி உள்ளது. இம்முறை மது அரக்கன் காவு வாங்கி இருப்பது, சென்னையில் வசித்து வந்த 25 வயதே ஆன இளைஞர் ஒருவரை. குடிபோதை தலைக்கு ஏறி இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த அந்த நபர், தலையில் படுகாயமடைந்து பலியானார்.
கதறி அழும் இந்தத் தாய், தன் தலைமகனை மதுவுக்குப் பறிகொடுத்தவர். கும்பகோணம் மதகுச் சாலையைச் சேர்ந்த இவரது கணவர், மகன்கள் இருவர் என எல்லோருமே ஓட்டுனர்களாக தொழில் செய்பவர்கள். இதில் மூத்த மகன் ரகுநாத், டிப்ளமோ படித்துவிட்டு, சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகரில் நண்பர்களுடன் தங்கி, வாடகை வாகனம் ஒன்றை ஓட்டி வந்தார்.
தமிழ்ப் புத்தாண்டுக்கு முந்தைய நாள் என்பதால் வியாழன் இரவு ரகுநாத் அதிகளவில் குடித்திருந்நதாக கூறப்படுகிறது. அதே போதையில், தான் தங்கி இருந்த வாடகை வீட்டின் 2-வது மாடிக்கு ஃபோன் பேசுவதற்காகச் சென்றவர், நிலைதடுமாறி அங்கிருந்து கீழே விழுந்துள்ளார். தலையில் படுகாயமடைந்த ரகுநாத், அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இறந்த ரகுநாத்துக்கு பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். ஊரெல்லாம் புத்தாண்டு பிறந்ததை வரவேற்கும் நிலையில், தன் வயிற்றில் பிறந்த மகனை மதுபோதைக்கு வாரிக் கொடுத்த தாய்க்கு ஆறுதல் சொல்ல, ரகுநாத்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் யாராலும் முடியவில்லை. இன்னும் எத்தனை உயிர்களை குடிப்பழக்கம் பலி வாங்கும் என்ற சமூக ஆர்வலர்களின் கேள்விக்கு இதுவரை விடையுமில்லை.