சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் தனியாக சென்ற இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்று போதையில் தொல்லை கொடுத்ததாக, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி காவல் ஆய்வாளரை இளைஞர்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பார்ப்பதற்கு திருவிழாவில் காணாமல் போன பையன் போல திருதிருவென விழிக்கும் இவர் தான் பெண்ணை கேலி செய்ததாக பொதுமக்களிடம் சிக்கிய ஆர்.பி.எஃப். எஸ்.ஐ சீனிவாஸ் நாயக்.!
சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுரங்கப் பாதையில் தனியாக நடந்து சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்ற சீனிவாஸ் நாயக் இந்தியில் கிண்டலடித்து தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
சீருடையில் இல்லாமல் அரைடவுசர் மற்றும் டீசர்ட்டுடன் ரெயிலில் டீ விற்கும் பையன் போல இருந்ததால் அவரை அந்த வழியாக சென்ற இந்தி தெரிந்த இளைஞர் மடக்கிப்பிடித்து சத்தம் போட்டுள்ளார்.
தன்னை போலீஸ் எஸ்.ஐ என்று கூறி சீனிவாசஸ் நாயக் திமிறி உள்ளார். அவர் சத்தமிட்டதால் மற்ற இளைஞர்கள் அவரை மடக்கிப்பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்
ஆர்.பி.எப் போலீசாரும், தமிழக ரெயில்வே போலீசாரும் ஒரே நேரத்தில் அங்கு வந்த நிலையில் அவரை ஆர்.பி.எப் போலீஸ் அழைத்துச்செல்ல இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எஸ்.ஐ.சீனிவாஸ் நாயக் மது அருந்தி இருப்பதாக குற்றஞ்சாட்டிய இளைஞர்கள் அவரை உடனடியாக அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றனர்.
கூடுதல் தமிழக ரெயில்வே போலீசார் , சம்பவ இடத்துக்கு வந்து சீனிவாசஸ் நாயக்கிடம் செல்போனை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது, அங்கு சாதாரண உடையில் வந்த ஆர்.பி.எப் காவலர் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
சிலர் அவரை நெருக்கி தள்ளிச்சென்றதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.ஐ. சீனிவாஸ் நாயக்கின் இந்த ஈவ் டீசிங் நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர்.
தனக்கு விடுமுறை என்பதால் , சாதாரண உடையில் ரெயில் நிலையத்தில் சுற்றியதாக சீனிவாசன் தெரிவித்த நிலையில் அவரிடம் கைப்பற்றப்பட்ட செல்போனை ஆய்வு செய்ததில் ஏராளமான பெண்களை புகைப்படம் எடுத்து வைத்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதில் அவர் பெண்ணை பின் தொடர்ந்து சென்று அத்துமீறலில் ஈடுபட்டது உண்மையா என்று ஆய்வு செய்து வருகின்றனர். உண்மை என்று தெரியவந்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.