சென்னையில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியை நிர்வாணப்படுத்தி நகைப்பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருபவர் 70 வயது மூதாட்டி. இவரது கணவர் காவல் ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றார். அவரது மறைவுக்கு பின்னர், தனது மகனுடன் வசித்து வந்தார்
திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீடு வாடகைக்கு இருக்கிறதா? என கேட்டு 2 நபர்கள் கதவை தட்டி உள்ளனர். கதவை மூதாட்டி திறந்தவுடன் கதவை மிக வேகமாக எட்டி உதைத்து வீட்டுக்குள் நுழைந்து அவரை அடித்து கீழே தள்ளி உள்ளனர். பின்னர் அவரது கையையும் வாயையும் துணியால் கட்டிப் போட்டு உள்ளனர்.
முன்னதாக அந்த பெண்மணி கொள்ளையர்களை தடுக்க முயன்ற போது கத்தியால் அவரது கை விரல்களை வெட்டி உள்ளனர். இதற்கிடையே அந்த பெண்ணை மிரட்டி கொண்டிருந்தபோது, வெளியே சமையல் கேஸ் சிலிண்டர் போடுவதற்காக டெலிவரி பாய் வந்து கதவைத் தட்டி இருக்கிறார். கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டி மூதாட்டியை வீட்டின் கதவை திறக்க விடாமல் செய்துள்ளனர்.
உன்னுடைய மகன் எங்கே இருக்கிறான் அவனை தேடி தான் வந்திருக்கிறோம் என மிரட்டிய கொள்ளையர்களிடம், தேவையானதை எடுத்துச் செல்லுங்கள் என கூறியிருக்கிறார். இரண்டு கொள்ளையர்களும் சேர்ந்து பீரோவை உடைத்து அதில் இருந்த சுமார் 35 சவரன் தங்க நகைகள், 60 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
போலீஸிடம் சென்றால் உன்னை குத்தி கொலை செய்து விடுவேன் எனக் கூறி 70 வயது பெண் என்றும் பாராமல், ஆடைகளை எல்லாம் களையச் செய்து நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டு வெளியில் சொன்னால் இந்த புகைப்படத்தை இணையத்தில் போட்டு விடுவோம் என்று மிரட்டிச்சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற அரும்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அருகிலுள்ள சிசிடிவி காமிரா காட்சிகளையும் வைத்தும் விசாரித்து வருகின்றனர்.
மூதாட்டியின் மகன் டிரேடிங் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்காக பலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்தாததால் பலர் அவ்வப்போது வந்து மிரட்டி சென்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் அறிமுகம் இல்லா நபர்கள் வந்தால் கதவை திறக்க வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.