சுற்றுலாவுக்காக சென்னை வந்த கனடா நாட்டு முதியவரிடம் போலீஸ் எனக் கூறி பணம் மற்றும் பொருட்களை கொள்ளை அடித்து சென்ற டிப் டாப் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீதரன் தாஸ் ரத்தினம் என்பவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்று அரசு துறையில் பணியாற்றி வந்துள்ளார். அண்மையில் ஓய்வு பெற்ற இவர் இந்தியாவில் உள்ள ஆன்மீக சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் சென்னை வந்துள்ளார்.
சிந்தாதிரிபேட்டை மூசாசாகிப் தெருவில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர், கடைசியாக திருப்பதி சென்று விட்டு, இன்னும் 4 நாட்களில் மீண்டும் கனடா செல்ல திட்டுமிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தியாகராயர் நகரில், ஃபாரின் எக்ஸ்சேன்ச் அலுவலகத்தில், டாலரை இந்திய ரூபாயாக மாற்றிவிட்டு திரும்பும் போது, கருநீல நிறத்தில் சட்டை அணிந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் முதியவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.
வெளிநாட்டை சேர்ந்தவரா என்று கேட்டுக் கொண்டே எங்கு தங்கி உள்ளீர்கள்? என முதியவரிடம் பேச்சுக் கொடுத்த அந்த டிப் டாப் ஆசாமி, தானும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தான் தங்கியிருக்கும் ஹோட்டல் சரியில்லாததால், நீங்கள் தங்கியுள்ள அறையைக் காட்டுமாறும், அங்கு தனக்கும் ஒரு அறை எடுத்துக் கொடுக்குமாறும் கேட்டுள்ளார். அதனை நம்பிய முதியவர், அந்த நபரை தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், முதியவரின் அறைக்கு சென்று இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, கதவை தட்டி உள்ளே நுழைந்த நபர், கதவை தாழிட்டுவிட்டு, தான் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வரும் ஸ்பெஷல் போலீஸ் எனவும், நீங்கள் போதைப்பொருள் கடத்தி வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளதாகவும் கூறி, முதியவரை மிரட்டி பாஸ்போர்ட் மற்றும் செல்போன்களை பிடுங்கிக் கொண்டுள்ளார்.
முதியவரை மிரட்டி அமர வைத்துவிட்டு அறையை சோதனையிடுவது போல நடித்து, பையில் இருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம், 25 ஆயிரம் மதிப்புள்ள நைக் ஷூ, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கூலிங்கிளாஸ் என சுமார் 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை எடுத்துகொண்ட அந்த நபர், கீழே போலீஸ் ஜீப் நிற்பதாகவும், நாங்கள் கீழே சென்றவுடன் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு கீழே வர வேண்டுமெனக் கூறியதோடு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி அடித்தால் தான் நீ உண்மையை கூறுவாய் என மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த முதியவர் அவர்கள் இருவரும் கீழே சென்றதும், அவர்களை பின் தொடர்ந்து கீழே சென்ற போது போலீஸ் ஜீப்பும் இல்லை, போலீஸ் எனக்கூறியவர்காளும் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டத உணர்ந்து சிந்தாரிப்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இன்னும் 4 நாட்களில் மீண்டும் கனடா செல்ல உள்ள நிலையில், உடைமைகளை இழந்து நிற்கதியாய் நிற்கும் முதியவர், போலீசார் துரிதமாக செயல்பட்டு உடமைகளையும், பணத்தையும் பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.