சென்னையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் கடத்தி செல்லப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சரணடைந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நொளம்பூரைச் சேர்ந்தவர் பைனான்சியர் சோட்டா வெங்கட். இவர் 2 பேருடன் நொளம்பூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து, தம்மிடம் கடன் பெற்றவரை கொலை செய்து எரித்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சோட்டா வெங்கட் இடம் அயனம்பாக்கத்தை சேர்ந்த பாபுஜி என்பவர் பணம் வசூல் செய்யும் பணியில் இருந்துள்ளார். அப்போது பாபுஜி 2 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதுடன் 21 சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளார். இந்த விவகாரம் காவல்நிலையத்திற்கு வந்தபோது, போலீசார் சமாதானம் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோயம்பேடு அருகே ஓட்டல் ஒன்றின் அருகில் நின்று இருந்த பாபுஜியை,சோட்டா வெங்கட் அழைத்து வர சொன்னதாகக் கூறி, நவீன் என்பவர் காரில் அழைத்து சென்றுள்ளார். நொளம்பூர் வெங்கட் இல்லம் கொண்டு செல்லப்பட்ட பாபுஜியை இரும்பு ராடால் அடித்து பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர்.
இதில் வலி தாங்காத பாபுஜி அதிகாலை உயிரிழந்து விட்டதால் அவரது உடலை அருகில் உள்ள குப்பை மேட்டில் போட்டு எரித்து விட்டதாக சரணடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எரிந்த நிலையில் உடலை மீட்ட போலீசார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சோட்டா வெங்கட், திலிப், சரவணன், கோபால், நவீன் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.