குஜராத்தின் அகமதாபாத்தில் பாய்ந்தோடும் சபர்மதி நதி, அழிவின் விளிம்பில் இருந்து தற்போது பலகட்ட முயற்சிகளுக்கு பின்னர், இருபுறமும் சாலை, நடைபாதைகள் என மெருகடைந்து புத்துயிர் பெற்றுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
குஜராத்தின் அகமதாபாத் நகரின் மையத்தில் பாயும் சபர்மதி நதி, கரையில் ஆக்கிரமிப்புகள், கழிவு நீர் கலப்பு என மாசடைந்து, பாழ்பட்டு காணப்பட்டது. இந்த நதிக்கரையில் தான், காந்தியின் ஆசிரமமும் அமைந்துள்ளது. நமது சென்னையில் உள்ள கூவம் ஆறு ஒருகாலத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கியது போல், சபர்மதி நதியும் முக்கிய நீராதாரமாக திகழ்ந்தது. தற்போதைய கூவம் ஆற்றின் நிலைதான், கடந்த 2004-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சபர்மதி நதிக்கும் நிலவியது.
அதனை சீர்செய்ய, சபர்மதி நதிக்கரையோர சீரமைப்பு திட்டம் கடந்த 1997-ல் உருவாக்கப்பட்டு, 2004ல் செயல்பாட்டுக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ் தற்போது, 17 கிலோ மீட்டரில் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டு, சபர்மதியின் கரைகள் பொலிவு பெற்றுள்ளன.
சுமார் 1,200 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கான முழு செலவையும் அகமதாபாத் மாநகராட்சியே ஏற்று, முதல் கட்டத்தில் ஆற்றின் இருபுறமும் தலா 11.5 கிலோமீட்டர் வீதம் மொத்தம் 23 கிலோமீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டது. மீதமுள்ள 5.5 கிலோமீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெற்றுவருவதாக இத்திட்டத்தின் செயல் இயக்குநராகவும், மாநகராட்சி ஆணையராகவும் உள்ள தமிழரான ஐ.ஏ.எஸ் அதிகாரி எம். தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதற்காக முதலில் இங்கிருந்த 10,500 குடியிருப்புகள் அகற்றப்பட்டு, 15 கிலோமீட்டர் தூரத்தில் குடியிருப்பு கட்டித்தரப்பட்டு, வாழ்வாதாரத்துக்கான வசதிகளும் செய்து தரப்பட்டதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், கழிவுநீர் கலக்காமல் இருக்க இருபுறமும் கால்வாய் அமைக்கப்பட்டு, அந்த கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு சபர்மதி நதி புத்துயிர் பெற்றுள்ள நிலையில், நமது சிங்காரச்சென்னையின் கூவம் ஆற்றையும் மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.