பிரிந்து சென்ற காதலருடன் சேர்த்து வைப்பதாக கூறி, சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் 40 சவரன் தங்க நகைகளை வாங்கி மோசடி செய்ததோடு, தனிப்பட்ட தகவல்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டிய 2 பஞ்சாப் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
காதலில் தோல்வியடைந்த சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், காதலரை மீண்டும் அடைவதற்கு கூகுளில் வழி தேடியுள்ளார். அப்போது "ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்"என்ற செயலி தெரிய வரவே, அதை பதிவிறக்கம் செய்து தனது பெயர், காதல் குறித்த தனிப்பட்ட தகவல்களை பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து அவரை தொடர்பு கொண்ட 2 இளைஞர்கள், காதலருடன் இணைத்து வைப்பதாக கூறி சென்னை விமானநிலையத்துக்கு வரும்படி அழைத்துள்ளனர்.அங்கு வந்த இளம் பெண்ணிடம் நைசாக பேசி, 2 தவணைகளாக 40 சவரன் தங்க நகையை வாங்கியுள்ளனர்.
ஆனால் சொன்னது போல காதலருடன் சேர்த்து வைக்காத 2 பேரும், மேலும் 5 லட்சம் ரூபாய் வேண்டுமென அந்த பெண்ணிடம் கேட்டுள்ளனர்.
இதற்கு அந்த பெண் செவி மடுக்காததால், அவர் ஏற்கெனவே அளித்த தனிப்பட்ட தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அஞ்சிய இளம் பெண், விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் அளித்த ஆலோசனையின்பேரில், 2 பேரிடமும் பேசி விமான நிலையத்துக்கு அந்த பெண் வரவழைத்தார்.
அங்கு வந்த 2 பேரையும் மடக்கி போலீசார் விசாரித்தபோது, அவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அனில் குமார், ககன்தீப் பார்கவ் என்பதும், இதைப்போல் பல இளம் பெண்களையும் இளைஞர்களையும் ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்துள்ளதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 8.5 லட்சம் ரூபாய், 54 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.