செல்போனுக்கு மின்கட்டணம் செலுத்தும் லிங்க் அனுப்பி, தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் பறித்த ஹரியானாவைச் சேர்ந்த ஜம்தாரா கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை செயின்தாமஸ் மவுன்ட்டை சேர்ந்தவர் அனந்தராமன். இவரது செல்போனுக்கு 12 ரூபாயில் மின்கட்டணம் செலுத்தலாம் என்ற சலுகையுடன் ஒரு குறுந்தகவல் வந்தது. மின்வாரியத்தில் இருந்து வருவதாக எண்ணி அந்த லிங்கை தொடர்பு கொண்டுள்ளார்.
மின் கட்டண தொகையை ஆன் லைனில் செலுத்திய சிறிது நேரத்தில், தனது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 98 ஆயிரத்து 915 ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தென்மண்டல சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
அதே போல பெண் ஒருவரின், செல்போனுக்கு எச்டிஎப்சி வங்கி கணக்கின் கேஒய்சி ஆவணங்கள் இன்னும் சமர்பிக்கப்படவில்லை. உங்கள் வங்கிக் கணக்கை இன்றுடன் முடக்க இருக்கிறோம். இதைத் தவிர்க்க கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் என மெசேஜ் வந்துள்ளது. அதனை நம்பி கிளிக் செய்த போது அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வழக்கையும் விசாரித்த சைபர் கிரைம் போலீசார், திருடப்பட்ட பணம் மாற்றப்பட்ட வங்கி கணக்கை வைத்து மோசடியில் ஈடுபட்டது ஹரியானாவை சேர்ந்த மோசடி கும்பல் என்று கண்டறிந்தனர்.
சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான தனிப்படை போலீசார் அரியானா சென்று அங்குள்ள போலீசாரின் உதவியோடு நான்கு நாட்கள் கொள்ளையர்களை தீவிரமாக தேடினர். செல்போன் சிக்னல்களை பின் தொடர்ந்து ஜம்தாராவை பூர்வீகமாக கொண்ட மஞ்சித் சிங், நாராயண சிங் ஆகிய இருவரை சுற்றிவளைத்தனர்.
விசாரணையில், ஒவ்வொரு மாநிலத்திலும் தரகர்களை வைத்து செல்போன் நம்பர்களை பெற்று நாடு முழுவதும் ஒவ்வொருவரின் செல்போனில் குறுந்தகவல் அனுப்பி மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.
சைபர் கொள்ளை கூட்டத்தின் தலைநகரமான ஜம் தாராவில் இருந்து செல்போனில் குறுஞ்செய்தியை தொட்டாலே உங்கள் மொபைல் போனில் வைக்கப்பட்டிருக்கும் வங்கி செயலிகள், ஜிபே போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் உள்ளிட்டவை மூலம் வங்கித் தரவுகளை திருடி பணத்தை நொடிப் பொழுதில் கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மற்றொரு வங்கிக் கணக்கிற்கு செலுத்தினால் போலீசார் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என்று, கொள்ளையர்கள் முன் கூட்டியே ஏராளமான நகை கடன் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கப்பட்ட கடனுக்கு பதிலாக கொள்ளை பணத்தை செலுத்தி உள்ளனர்.
நாராயணன் சிங் நகைக்கடை ஏஜென்ட் ஆகவும், மஞ்சித் சிங் எல்ஐசி ஏஜென்ட் ஆகவும் பணிபுரிந்து கொண்டே இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளனர்
இந்த இருவர் மட்டும் 75 லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைன் மோசடி மூலம் சுருட்டி உள்ளனர்.
ஆசைக்காட்டும் வகையில் வரும் குறுஞ்செய்தியை நம்ப, அதில் உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் எனபோலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.