சென்னை பள்ளிக்கரனையில் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை, நான்கு மாத முயற்சிக்கு பின்னர் கொல்கத்தாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை புனித தோமையார் மலையில் உள்ள காவல்துறையின் மோட்டார் வாகன பராமரிப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்தவர் 56 வயதான ஆண்ட்ரூஸ்.
வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த சமூக சேவகரான 36 வயதான பெண்ணுக்கு உதவி செய்வதாக ஏமாற்றி, பாலியல் அத்துமீறல் செய்ததாக ஆண்ட்ரூஸ் மீது கூறப்பட்ட புகாரின் பேரில், பள்ளிக்கரனை போலீசார் பலாத்கார வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணைக்கு காவல் நிலையம் வந்த ஆண்ட்ரூஸை, போலீசார் மறு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறி அனுப்பி வைத்த நிலையில், அவர் தலைமறைவானார்.
தன் மீது புகார் அளித்த பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதோடு, கார் ஏற்றி கொல்ல முயன்றதாக மேலும் ஒரு வழக்கும் ஆண்ட்ரூஸ் மீது பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றுக்கொண்டதால், புகார் அளித்த பெண்ணை மிரட்டி வந்ததால், ஆண்ட்ரூஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பாதிக்கப்பட்ட பெண் செய்த மனுவின் அடிப்படையில், ஆண்ட்ரூஸின் முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது.
பலாத்கார வழக்கையே தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆண்ட்ரூஸ் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ஆண்ட்ரூஸ் பயன்படுத்திய செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பரை வைத்து போலீசார் அவரை கண்காணித்தனர். சென்னையில் இருந்து ஒவ்வொரு மாநிலமாக தப்பிச்சென்ற ஆண்ட்ரூஸ், கடந்த 10 நாட்களாக கொல்கத்தாவில் பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர்.
தனக்கு தேவையான நேரங்களில் செல்போனை ஆன் செய்துவிட்டு, மற்ற நேரங்களில் சுவிட்ஜ் ஆப் செய்து 4 மாதங்களாக மாயாவி போல தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ஆண்ட்ரூஸை, சிபி சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் கொல்கத்தாவில் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரை விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்