சென்னை தண்டையார் பேட்டையில் நண்பர்களை அழைத்து வந்து வீட்டில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாடிய கணவரை கண்டித்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. உயிரிழந்த பின் தனது மகள் காகமாக வந்து உணவருந்தியதாக நம்பும் தாயின் கண்ணீர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகரை சேர்ந்த நந்தகுமார், மணலியை சேர்ந்த பபிதாவை காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும் 7வயதில் மகனும் உள்ளனர்.
கடந்த 1ந்தேதி பபிதா வழுக்கி விழுந்து மூர்சையானதாக மாமனார் மாமியாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரை மருத்துவமனைக்கு நந்தகுமார் தூக்கிச்சென்றார். அங்கு பபிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தண்டையார் பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். பபிதா கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருந்து பிணகூறாய்வில் தெரியவந்ததை அடுத்து போலீசார் கணவர் நந்தகுமாரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்
முதலில் தனது மனைவி வழுக்கி விழுந்து மூர்ச்சையானதாக கூறியவர், புத்தாண்டுக்கு மது அருந்தியதால் மனைவி தன்னிடம் கோபித்துக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாற்றிக் கூறினார். இதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பபிதா கொலைக்கான மர்மம் விலகியது.
31 ந்தேதி மாலையில் பபிதா மற்றும் தனது குழந்தைகளை, மாமியார் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் நந்தகுமார். இரவு வீடுதிரும்பிய அவர் முதலில் நண்பர்களுடன் கடலுக்குள் படகில் சென்று மது அருந்தி புத்தாண்டை கொண்டாடி உள்ளார். அதன் பின்னர் அதே நண்பர்களை தனது வீட்டு அழைத்து வந்து மது விருந்துடன் கூத்தடித்துள்ளனர். இதானால் வீடு அலங்கோலமாக கிடந்துள்ளது
1ந்தேதி பகலில் தனது வீட்டிற்கு திரும்பிய பபிதா , வீடு கிடந்த நிலையை பார்த்து, மது அருந்தியது குறித்து கேட்டு சத்தமிட்டதால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பபிதா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்க, ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக நந்தகுமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சத்தம் கேட்டு வந்த குழந்தைகளிடம் அம்மா தவறி விழுந்து மயங்கியதாக நாடகமாடியதும் தெரியவந்தது.
இதற்கிடையே பபிதாவின் உடலை அடக்கம் செய்த மறு நாள், காகத்திற்கு உறவினர்கள் சோறு வைத்த போது நீண்ட நேரமாக காகம் சோறு எடுக்காமல் சுற்றி சுற்றி வந்துள்ளது. பபிதாவின் தாய், தனது மகளை நினைத்து சோற்றை கிளறி வைத்த அடுத்த நொடியே காகம் வந்து சோறு தின்று சென்றதால் தங்கள் மகள் காகம் உருவத்தில் வந்ததாக அவரது தாய் உருக்கமாக தெரிவித்தார்
காகமாக வந்தது தனது மகள் என்று தாய் நம்பும் நிலையில் பபிதாவின் கழுத்தில் இருந்த காயங்களே அவர் கொல்லப்பட்டதை காட்டிக் கொடுத்தது என்று போலீசார் தெரிவித்தனர்.