காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நியாயம் கேட்டு 10 பேருந்துகளில் வந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டதால் , கே.எஸ். அழகிரியின் ஆதரவாளர்கள் ஓட ஓட விரட்டி இரும்பு பைப்புகளால் தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்குன்னு கேட்கற அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் மீண்டும் ஒருமுறை தொண்டர்களை தாக்கிய குண்டர்களால் ரத்தகளரியானது
இந்த முறை நெல்லை கிழக்கு மாவட்ட தலைவரை மாற்றக்கோரி 10 பேருந்துகளில் சென்னைக்கு வந்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் காரை மறித்து, ஆவேசம் காட்டியதால் அடிதடி அரங்கேறியது..!
அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை இழுத்து வழியில் போட்டதோடு, எங்க ஊருக்கு வந்து பாருடான்னு சாலையில் நின்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஸ்வாவை, நாசுக்காக பேசி உள்ளே அழைத்துச்சென்ற உள்ளூர் தொண்டர்கள் இரும்பு பைப்பால் அடித்து வெளியே விரட்டினர்
அவர் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, இன்னும் போகலையா என்று மீண்டும் தாக்கப்பட்டார்
இது ஒரு புறம் இருக்க அழகிரியின் காருக்கு முன்னால் நின்று ஓங்கி குரல் எழுப்பிய தொண்டரை, குண்டர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதில் அவரது வாய் உடைந்து நிலை குலைந்து போனார்.
விழுந்த அடியில் தன் கையில் கடிகாரம் அணிந்திருப்பதையும் மறந்து, கீழே கிடந்த கடிகாரத்தை தன்னுடையது என்று கேட்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது.
அவரிடம் நீங்கள் எந்த பகுதி என்று செய்தியாளர்கள் கேட்ட போது அவர் ஒரு பகுதியும் வேணாம், போதும் போங்க என்று விரக்தியோடு வெளியேறினார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெயர் சொல்ல விரும்பாத காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், சத்தியமூர்த்திபவனில் எந்த ஒரு அடிதடியும் நடக்கவில்லை என்றும் சினிமாபாணியில் தங்கள் தலைவரின் வாகனங்களை மறித்தவர்களை வெளியேற்றியதாக விளக்கம் அளித்தார்.