சென்னை மடிப்பாக்கத்தில் தனியாக இரு சக்கரவாகனத்தில் சென்ற பெண்ணை பின் தொடர்ந்து சென்று புல்லட் பைக்கால் இடித்து தள்ளி, கீழே விழுந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு கொலைவெறி தாக்குதலிலும் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காயங்களுடன் சென்று கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மடிபாக்கம் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் ராம் நகர் பகுதியில் இரவு நேரத்தில் தான் தனியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற போது புல்லட் வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி தன்னை இடித்து கீழே தள்ளியதாக தெரிவித்திருந்தார்
சகதியில் விழுந்ததால், எழுந்து சென்று அருகில் தேங்கிய மழை நீரில் கைகளை கழுவியபோது, அந்த ஆசாமி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், தற்காத்து கொள்ள முயன்ற போது அவன் தன்னை முடியை பிடித்து இழுத்து இரும்பு கேட்டுடன் தலையை மோதி கடுமையாக தாக்கியதாகவும் அந்த புகாரின் தெரிவித்திருந்தார்
வலிதாங்க இயலாமல் அலறியதால், தன்னை ஆபாச வாரத்தைகளால் திட்டிவிட்டு புல்லட்டில் ஏறி தப்பிச்சென்று விட்டதாகவும் அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்புகாரில் தெரிவித்திருந்தார்.
அந்த பெண்ணின் புகாரின் பேரில் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் ஆய்வு செய்த உதவி ஆணையர் பிராங்கிளின் ரூபன் , உதவி ஆய்வாளர் நிர்மல் , மணிமாறன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் புல்லட் ரோமியோவை போலீசார் அடையாளம் கண்டனர்
விசாரணையில் அவன் வேளச்சேரி பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன் என்கிற சரவணன் என்பதும் தனியார் இஞ்சினியரிங் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்த அவன், வேளச்சேரியில் இருந்து இரவு நேரத்தில் தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் திட்டமிட்டு வாகனத்தை மோதச்செய்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
அவனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கல்லூரி பேராசிரியராக இருந்து கொண்டே மது அருந்திவிட்டு பொது வெளியில் ஒரு பெண்ணை புல்லட்டில் விரட்டிச்சென்று அத்து மீறியதால் அவன் கல்லூரியில் என்னென்ன அத்து மீறல்களில் ஈடுபட்டான் என்பது குறித்தும் போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இரவு நேரங்களில் தனியாக இரு சக்கரவாகனத்தில் வீடு திரும்பும் பெண்கள், தங்களை யாராவது பின் தொடர்ந்தால் செல்போனில் காவல் உதவி செயலியில் புகார் செய்தால் போலீசார் விரைந்து வருவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்