சென்னை மணலி எண்ணூர் விரைவுச்சாலையில் ஆண்டார் குப்பம் சந்திப்பில் இரவு முடங்கிய போக்கு வரத்தை தனி மனிதனாக நின்று ஓட்டுனர் ஒருவர் சரி செய்தார்.
சென்னை மணலி எண்ணூர் துறைமுகம் செல்லும் சாலையில் திங்கட்கிழமை 10.30 மணியளவில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுமார் 1/2 மணி நேரம் ஆமையைவிட மெதுவாக நகர்ந்த வாகனங்கள் ஆண்டார் குப்பம் சந்திப்பை கடக்க இயலாமல் 1/2 மணி நேரத்துக்கும் மேலாக முற்றிலும் முடங்கியது.
அந்த சந்திப்பில் எந்த ஒரு காவலரும் பணியில் இல்லாத நிலையில், காவல் அவசர உதவி எண்ணுக்கு உதவி கேட்டு அழைப்பு விடுத்தும் எந்த உதவியும் கிடைக்க வில்லை.
அங்கிருந்து வாகன ஓட்டியை தொடர்பு கொண்ட இரவு பணி உதவி ஆய்வாளர் வெங்கடேசன், துறைமுகத்துக்கு நிறைய லாரி போனா அப்படித்தான் இருக்கும், நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என்றார். மேலும் அது போக்குவரத்து போலீஸ் சம்பந்தப்பட்டது, நாங்கள் உதவ முடியாது என்று கையை விரித்து விட்டார்.
என்ன செய்வதென்று தெரியாமல் வாகன ஓட்டிகள் தவித்து நின்ற போது, திடிரென வாகனங்கள் நகர தொடங்கின.
போலீஸ் வந்து விட்டது போல என்று நிம்மதிப் பெருமூச்சுடன் ஆண்டார் குப்பம் சந்திப்பை கடந்தால், இளஞ்சிவப்பு சட்டையும், மடித்து கட்டிய வேட்டியுடன் தனி ஒருவனாக இளைஞர் ஒருவர் , லாரிகளுக்கிடையே உயிரை பணயம் வைத்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்து கொண்டிருந்தார்.
3 பக்கமிருந்து வந்த கனரக வாகனங்களையும் , சரியாக மரித்து நிறுத்தி, இடைவெளிவிட்டு அவை செல்ல வழி செய்து கொடுத்தார்.
அப்போது அங்கு வந்த மணலி புது நகர் காவல் துறையினரின் ரோந்து போலீசார், அந்த தனி மனிதனுடன் சேர்ந்து போக்கு வரத்தை சீர் செய்யாமல், அது போக்கு வரத்து போலீசாரின் வேலை எங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று வேடிக்கை பார்த்தபடி நின்றனர்.
போக்குவரத்தை சீர் செய்த அந்த தனி ஒருவனின் பெயர் அழகுராஜா, ஓட்டுனராக வேலை பார்த்து வரும் அவர், பணி முடிந்து வீடு திரும்புகையில், வாகன ஓட்டிகள் தொடந்து செல்ல முடியாமல் சாலையில் பரிதவித்து நிற்பதை பார்த்து, போக்குவரத்தை சரி செய்ய தன்னால் இயன்ற உதவியை செய்ததாக கூறி தன்னடக்கத்தோடு வீட்டிற்கு சென்றார்.