சென்னை மணலி அருகே பேண்டு அணியவில்லை என்று கூறி லாரி ஓட்டுனருக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் 500 ரூபாய் அபராதம் விதித்ததை கண்டித்து ஓட்டுனர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
சென்னை மணலி எம்.எப்.எல் சந்திப்பு பகுதியில் துறைமுக சாலையில் காரில் அமர்ந்து கொண்டே லாரிகளை மறித்து அபராதம் வசூலித்துக் கொண்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி என்பவர், காக்கி சட்டை போட்டிருந்த லாரி ஓட்டுனர் ஒருவரிடம் ஏன் பேண்டு அணியவில்லை என்று கூறி 500 ரூபாய் அபராதம் விதித்தார்
அபராதம் விதித்த ஆய்வாளர் பார்த்தசாரதி மரியாதைக்குறைவாக பேசி அடிக்க கை ஓங்கியதால், வேதனை அடைந்த அந்த லாரி ஓட்டுனர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்
இந்த செய்தி தமிழகம் முழுவதும் ஓட்டுனர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எந்த இடத்தில் ஓட்டுனர் அழ வைக்கப்பட்டாரோ அதே இடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டது.
லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மறியலில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக காவல் உதவி ஆணையர் அவர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்
இதையடுத்து ஓட்டுனர்கள் மறியலுக்கு பதில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
லாரி ஓட்டுனரை அழவைத்த ஆய்வாளர் பார்த்தசாரதி முன் எச்சரிக்கையாக தனது சட்டையில் காமிராவை அணிந்தபடி லாரி ஓட்டுனர் சங்கத்தினருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்
அவரிடம்., ஓட்டுனர்களும் மனிதர்கள் தான் அவர்களை மரியாதை குறைவாக நடத்தாதீர்கள் என்றும், பேண்ட் அணியாததற்கு எல்லாம் அபராதம் வசூலிப்பது சரியா ? என்றும், அதனை மறு பரீசீலனை செய்யுமாறும் கோரிக்கை வைத்தனர்
15 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 14 மணி நேரத்தும் மேலாக காத்திருப்பதால் , லாரிக்குள் தகிக்க முடியாத வெப்பத்தால் பேண்ட் அணியமுடியவில்லை என்றும் லுங்கி அணிவதாகவும் விளக்கம் அளித்த ஓட்டுனர் சங்கத்தினர், துறைமுகம் செல்லும் லாரிகளை இயக்கும் ஓட்டுனருக்காவது லுங்கி அணிந்து லாரிகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் அதனை செய்து தருவதாக காவல் அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர்..