சென்னை அண்ணாசாலையில் தலைக்கவசம் அணியாமல் வந்த வட மாநில இளைஞர் ஒருவருக்கு மொத்தமாக 4000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டதால், ஆத்திரத்தில் வண்டியே வேண்டாம் என்று போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். இன்றைக்கு பில் போடுவாங்க.. நாளைக்கு மாமூல் வாங்குவாங்க.. என்று விமர்சித்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
தலைகவசம் அணியாததாலும், அவர் ஓட்டிவந்த வாகனத்துக்கு காப்பீடு இல்லாததாலும் 1700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது, ஏற்கனவே பெண்டிங் அபராத தொகை 2300 ரூபாய் இருப்பதால் மொத்தமாக 4 ஆயிரம் ரூபாய் கட்டிவிட்டு செல்லுமாறு போலீசார் கூறினர். இவ்வளவு அபராதம் எப்படி விதிக்கலாம் ? தன்னிடம் 1000 ரூபாய் தான் உள்ளது என்றும் போலீசிடம் வாக்குவாதம் செய்ததோடு தனக்கு வண்டியே வேண்டாம் எனக்கூறினார்.
தமிழ்நாட்டில் தான் போலீஸ் இப்படி நடந்து கொள்கின்றனர் என்று அந்த இளைஞர் பேசியதால், அப்படி என்றால் உங்கள் ஊருக்கு செல்ல வேண்டியது தானே என்று பதிலுக்கு போலீசார் கூறினர்.
வண்டியே வேண்டாம் என்றவரிடம், அபராதத்தை கட்டிவிட்டு வண்டியை எடுத்துச்செல்லுங்கள் என்று போலீசார் கூறியதும், ஆவேசம் அடைந்த அந்த இளைஞர், நான் கோர்ட்டில் அபராதம் செலுத்துகிறேன் வண்டியை தரமறுப்பது விதி மீறல் என்று போலீசாருடன் கடுமையான வாக்குவாதம் செய்தார்.
ஆரம்பத்தில் கேமராவை பார்த்ததும் போலீசாரிடம் குரலை உயர்த்தி உரிமைக்குரல் எழுப்பிய அந்த இளைஞர், தன் மீது தான் தவறு உள்ளது என்பதை உணர்ந்ததும் படம்பிடிக்க வேண்டாம் போங்க என்று ஒளிப்பதிவாளரை தடுத்தார்.
பின்னர் அபராதத்தை செலுத்திவிட்டு தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்ட அந்த இளைஞர் , தனக்கு அபராதம் விதித்த உதவி ஆய்வாளரை, சட்டையில் உள்ள பெயருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதன் பின்னர் இன்னிக்கு பில் போடுவாரு.. நாளைக்கு மாமூல் வாங்குவாரு என்று கூறியவாறே புறப்பட்டுச்சென்றார்.