மறுமணம் செய்ய நினைக்கும் பெண்களை குறிவைத்து பணம் அபகரிக்கும் கில்லாடி காதல் மன்னனை போலீசார் கைது செய்துள்ளனர். shaadi.com மூலம் அறிமுகமாகி ஆசை வார்த்தைகள் கூறி 30 நாட்களில் 36 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிய அந்த நபரை போலீஸார் மடக்கி பிடித்துள்ளனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் பகுதியில் வசித்து வரும் 35-வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
மறுமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஆன்லைன் வரன் பார்க்கும் இணையதளமான shaadi.com -ல் அந்த பெண் பதிவு செய்துள்ளார். இவரது ஃப்ரொபலை பார்த்து கடந்த ஜூன் மாதம் தொடர்பு கொண்ட 38 வயது ஹபீப் ரஹ்மான் என்ற நபர், தனது மனைவி இறந்து விட்டதாகவும்,சென்னையில் வேலை பார்த்துக் கொண்டு தனியாக வசித்து வருவதாகவும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று வரன் பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த பெண், நேரில் வருமாறு அழைக்கவே, சொகுசு காரில் பந்தாவாக போய் இறங்கினான் மோசடி மன்னன் ஹபீப் ரஹ்மான். தனக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு அண்ணன் இருப்பதாகவும் அண்ணன் கனடாவிலும், அக்கா புரூனேவில் இருப்பதாக அந்த நபர் கதை விட, அதையும் அந்த பெண் முழுமையாக நம்பியுள்ளார். அழகான பேச்சு, அமைதியான குணம், நல்ல மனிதர் போல் பாவனை என அனைத்தும் பிடித்து போய் விடவே, இரண்டாவது கணவர் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சியில் மறுமணத்திற்கு ஓகே சொல்லியிருக்கிறார் அந்த பெண்.
புரூனேவில் இருக்கும் தனது அக்கா ஜுலை மாதம் சென்னை வந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என புரூடா விட்டு விட்டு புறப்பட்டார் மோசடி மன்னன் ஹபீப் ரஹ்மான். இதன்பின்னர் தனது ஆட்டத்தை தொடங்கிய அந்த நபர் அவசரமாக தனக்கு 60 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும், இரண்டே நாட்களில் திருப்பி தருவதாகவும் அந்த பெண்ணுக்கு போன் செய்துள்ளார். வருங்கால கணவர்தானே என்ற நம்பிக்கையில் அந்த பெண்ணும் ரஹ்மானுக்கு கூகுள் பே செய்துள்ளார்.
இதன் பின்னர் ஐந்து நாட்கள் கழித்து கிஷ்கிந்தா பக்கத்தில் தனக்கு ஏக்கர் கணக்கில் நிலம் இருப்பதாகவும் அந்த இடம் குறித்து வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அந்த வழக்கை முடிக்க பத்து லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், நிலம் கைக்கு வந்தால் கோடி கணக்கில் விற்பனை செய்து இருவரும் செட்டில் ஆகிவிடலாம் என்றும் அந்த நபர் ஆசை வார்த்தைகளை அள்ளி விட, செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசையில் அந்த பெண்ணும் 10 லட்சம் ரூபாய் பணத்தை நேரில் அளித்துள்ளார். இவ்வாறாக 30 நாட்களில் சிறுக,சிறுக 36 லட்சம் ரூபாயும், 13 சவரன் தங்க நகைகளும் பறிபோயின. பணத்தை உடனே திருப்பி தருவதாக கூறிய ஹபீப் ரஹ்மான் பின்னர் தொலைப்பேசியில் சாக்கு சொல்ல ஆரம்பித்தான்.
மோசடி நாடகம் முடிந்ததும், பணம் கொடுத்தற்கு நன்றி, பாய் என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய ஹபீப் ரஹ்மான் தனது போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு தலைமறைவானான்.
மூன்று மாதங்களாக தேடியும் ஹபீப் ரஹ்மான் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்த அந்த பெண் போலீஸ் உதவியை நாடவே, தனிப்படை அமைத்து தேடிய போலீசார் புகார் பெற்ற 12 மணி நேரத்தில் பூந்தமல்லி அருகே மனைவியுடன் வசித்து வந்த ஹபீப் ரஹ்மானை கைது செய்தனர்.