சென்னையில் பிரபல ஓட்டல்களில் வரவேற்பாளராக பணிபுரிந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து ஓட்டல் ஊழியர்கள் பிளாக் மெயில் செய்ததால், தனது பள்ளி பருவ காதலனுடன் அவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது..
சென்னை திருவல்லிக்கேணியில் விசிக மாவட்ட செயலாளர் செல்லத்துரைக்கு சொந்தமான ஒயிட் ஹவுஸ் விடுதியில் கடந்த 7ஆம் தேதி மேற்குவங்கத்தை சேர்ந்த காதல் ஜோடியான பிரசன்ஜித் கோஷ், அர்பிதா பால் ஆகியோர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தனர்.
இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிணகூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்தனர். அந்த அறையில் இருந்து வங்க மொழியில் எழுதப்பட்ட தற்கொலை கடிதம் ஒன்றை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் இது தற்கொலை என்றும் பிளாக் மெயில் காதலர்களிடம் சிக்கி நெருக்கடிக்குள்ளானதால் இந்த விபரீத முடிவை மேற்கொண்டதும் வெளிச்சத்திற்கு வந்தது.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளம்பெண் அர்பிதா கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சென்னை வந்து, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரெயின் டிரி ஹோட்டலில் தங்கி வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அதே ஹோட்டலில் வேலை பார்த்து வந்த தர்மேந்திரா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியதால் நெருங்கி பழகி செல்போனில் வீடியோக்கள் எல்லாம் எடுத்துள்ளனர். அர்பிதாபாலுக்கு கூடுதல் சம்பளத்துடன் தி.நகரில் உள்ள பிரபல ஜி.ஆர்.டி ஹோட்டலில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணி கிடைத்துள்ளது.
அங்கு நிதிஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் நெருகி பழகி வந்ததாக கூறப்படுகிறது. அர்பிதாபால் ஏற்கனவே தர்மேந்திரா என்பவரை காதலித்து வருவதை நிதீஷ்குமாரிடம், அவரது நண்பர் ராஜா தெரிவித்துள்ளார். பின்னர் நிதீஷ் மற்றும் தர்மேந்திராவுடன் அர்பிதா பழகி வந்த விஷயம் இருவருக்கும் தெரிந்ததால் அர்பிதாவிடம் இருவரும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இவர்கள் அர்பிதாவுடன் தனிமையில் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை காண்பித்து நிதிஷ் குமார், தர்மேந்திரா, ராஜா ஆகியோர் நள்ளிரவு நேரங்களில் இச்சைக்கு இணங்குமாறு அர்பிதாவை மிரட்டியுள்ளனர்.தொடர்ந்து மூவரும் மாறி மாறி பிளாக்மெயில் செய்துள்ளனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த அர்பிதா என்ன செய்வதன்று தெரியாமல் மேற்கு வங்கத்தை சேர்ந்த சிறுவயது முதல் காதலரான பிரசன்ஜித் என்பவரை கடந்த 3 ஆம் தேதி சென்னைக்கு வரவழைத்து திருவல்லிக்கேணி விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் அர்பிதா கடிதம் எழுதி வைத்துவிட்டு தான் கொண்டு வந்த விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி அறியாத பள்ளிக்காதலன் பிரசன்ஜித் வெளியே சென்றால் போலீஸ் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் இரண்டு நாட்களாக பிணத்துடன் இருந்து விட்டு பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் நித்தீஷ்குமார், ராஜா ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அசாமிற்கு தப்பிச்சென்ற பிளாக் மெயில் காதலன் தர்மேந்திராவை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டவர்களின் செல்போனில் ஆபாசபடங்கள் ஏதும் இல்லை என்றும் அதில் படங்கள் ஏதேனும் அழிக்கப்பட்டுள்ளதா ? என்று ஆய்வு செய்ய செல்போன்களை சைபைர் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், மேலும் தலைமறைவாக உள்ள தர்மேந்திராவை கைது செய்தால் இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.