ஆசிரியைகள் படிக்க சொன்னதால் எரிச்சல் அடைந்த 9 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பள்ளியை இழுத்து மூடச்சொல்லி வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதம் சென்னையில் அரங்கேறி உள்ளது. தனது உடலை சென்னையில் எரித்தால் ஆவியாக உங்களை சுற்றிவருவேன் என்று வீடியோ வெளியிட்ட மாணவனின் விபரீத முடிவு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
சென்னை பாடி , குமரன் நகரில் வசித்து வரும் சேகர் என்பவரின் இளைய மகன் பாரதிசெல்வா. அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த செல்வா படிப்பில் சுமார் என்பதால் ஆசிரியைகள் படிக்கச்சொல்லி கண்டித்துள்ளனர். அவரது வீட்டிலும் நன்றாக படிக்க அறிவுறுத்தி உள்ளனர். எப்போதும் செல்போனும் கையுமாக நண்பர்களுடன் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்த செல்வாவை, ஆசிரியைகள் சிலர் படிக்க சொல்லி அறிவுறுத்தியதால் கடுமையான எரிச்சலடைந்துள்ளான்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னை படிக்க சொல்லி ஆசிரியைகள் தாக்குவதாகவும் அதனால் அந்த பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்று வீடியோ பதிவிட்ட பாரதி செல்வா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வாவின் சடலத்தை மீட்டு பிணகூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முன்பாக அவரது செல்போனில் பலவேறு வீடியோக்களை பதிவு செய்த செல்வா, தான் இறந்த பின்னர் சடலத்தை எக்காரத்தை கொண்டும் சென்னையில் புதைக்கவோ எரிக்கவோ கூடாது என்றும், தனது சொந்த ஊரான நகரியில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியதோடு, சென்னையில் உள்ள சுடுகாட்டில் தனது உடலை எரித்தால் ஆவியாக உங்களை சுற்றி வருவேன் என்று வீடியோ ஒன்றில் பேசி உள்ளான்.
போலீசார், அந்த மாணவன் பயன் படுத்திய செல்போனை கைப்பற்றியதோடு, அவனது பள்ளி தாளாளர் ஆட்கொண்டான், வகுப்பு ஆசிரியை பிரசன்ன குமாரி ஆகியோரிடம் பள்ளியில் மாணவனுக்கு நேர்ந்தது என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.