சென்னை கொடுங்கையூர் புறக்காவல் நிலையத்தில் விசாரணைக்கைதி ராஜசேகர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை தீவிரமடைந்துள்ளது. காவல்துறை அதிகாரிகளிடமும், உயிரிழந்த ராஜசேகரின் குடும்பத்தாரிடமும் மாஜிஸ்திரேட் லட்சுமி தீவிர விசாரணை நடத்தினார்.
சென்னை கொடுங்கையூர் புறக்காவல்நிலையத்தில் விசாரணைக்கைதி ராஜசேகர் உயிரிழந்த விவகாரத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் விசாரிப்பதாக கூறி கொடுங்கையூரை சேர்ந்த அப்பு என்கிற ராஜசேகரை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அழைத்து வந்த போலீசார், சிசிடிவி பொருத்தப்படாத எவரெடி நகர் போலீஸ் பூத்தில் வைத்து விசாரித்துள்ளனர். விசாரணையின் போது ராஜசேகர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ராஜசேகரை விசாரித்த புறக்காவல் நிலையத்தின் அருகில் உள்ள கட்டிங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிகளின் காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணைக்கைதி உயரிழந்த சம்பவத்தில், காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமை காவலர் ஜெய்சங்கர், மணிவண்ணன் மற்றும் முதல்நிலைக் காவலர் சத்தியமூர்த்தி ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இநநிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 5 காவல் துறையினரிடமும், மாஜிஸ்திரேட் லட்சுமி தனித்தனியே விசாரணை நடத்தினார்.
பின்னர் உயிரிழந்த ராஜசேகரின் தாய் உஷாராணி, சகோதரர் மணிகண்டன் உள்ளிட்டோரிடமும் மாஜிஸ்திரேட் லட்சுமி புகார்களை பெற்றுக்கொண்டார். தங்களது மகனை போலீசார் அடித்து கொன்றுவிட்டதாக அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
ராஜசேகரின் வயிற்றுப்பகுதியில் உதைத்ததற்கான தடயங்கள் இருப்பதாகவும், ரத்தம் கசிந்திருப்பதாகவும் ராஜசேகரின் தாயார் கூறியுள்ளார்.
இந்நிலையில், விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ராஜசேகர் மீது பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 25 -க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணையின் போது ராஜசேகர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும், பின்னர் வாந்தி வருவதாக கூறியதால் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மீண்டும் வாந்தி வருவதாக ராஜசேகர் தெரிவித்ததால், மருத்துவகுழுவினரின் அறிவுறுத்தலின் பேரில் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஆனால், வழியிலேயே ராஜசேகர் உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.