தாம்பரம் அருகே பைபாஸ் சாலையோரம் வாகனங்களுடன் ஓரங்கட்டும் காதல் ஜோடிகளை குறிவைத்து 50 சவரன் நகைகளை பறித்துச்சென்ற போலி காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்கு டேக்கா கொடுத்த காதல் ஜோடிகளை செல்போனில் நேக்காக படம் பிடித்து நகை பணம் பறித்த பைபாஸ் கொள்ளையன் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர்- மீஞ்சூர் சர்வீஸ் சாலையில் மாலை கருக்கலில் இளம் காதல் ஜோடிகளும், தங்களை இளமையாக நினைத்துக் கொள்ளும் ஜோடிகளும் ரோட்டுவாக்குல காதல் மொழி பேசுவது வழக்கம்.
இருட்ட தொடங்கியதும் இந்த காதலர்களின் நெருக்கத்தை படம் பிடித்து வைத்துக் கொள்ளும் மர்ம ஆசாமி ஒருவன் அவர்களை மிரட்டி நகை பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளான்.
இருசக்கர வாகனத்தில் வலம் வந்த அந்த டிப்டாப் ஆசாமி தனியாக இருக்கும் காதல் ஜோடிகளிடம் சென்று தன்னை போலீஸ் என கூறி ஆண் நபரை மட்டும் தனியாக அழைத்துச்சென்று உங்கள் அப்பாவின் தொலைபேசி எண் மற்றும் வீட்டு விலாசத்தை கேட்டு மிரட்டுவது அவர்கள் கெஞ்ச தொடங்கியதும் இருவரிடமும் இருக்கும் பணத்தை பறித்து விட்டு விரட்டிவிடுவது அவனது வழக்கம் என்று கூறப்படுகிறது.
அதே போல காரை இருட்டுக்குள் நிறுத்தி , மெய்மறந்து காதல் செய்வோரையும் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அவர்கள் அணிந்திருக்கும் நகைகள் அனைத்தையும் பறித்துச்செல்வதையும் வாடிக்கையாக்கி உள்ளான்.
பைபாஸ் சாலையில் ரோந்து வரும் போலீசார் காதல் ஜோடிகளை மிரட்டி நகை பணம் பறித்து செல்வதாக உளவுபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைக்க அவர்கள் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றதையடுத்து பைபாஸ் கொள்ளையன் யார் ? என்பதை கண்டுபிடிக்க தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் பீர்க்கன்காரணை காவல் ஆணையாளர் சிங்காரவேலன் தலைமையில் ஏழு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கினார்.
முதற்கட்ட விசாரணையில் முடிச்சூர் சர்வீஸ் சாலையில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ந்தேதி அன்று காரில் காதல் செய்து கொண்டிருந்த இருந்த ரகசியகாதல் ஜோடிகளில் ஆண் நபரை மிரட்டி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அழைத்து சென்று அவர் வைத்திருந்த 5000 ரூபாயை வாங்கிக் கொண்டு அங்கேயே இறக்கிவிட்டு விட்டு காரில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சென்று தாலி சங்கிலி உள்ளிட்ட 11சவரன் தங்க நகைகளை வாங்கிச்சென்றதை கண்டறிந்தனர். வீட்டுக்காரருக்கு விவகாரம் தெரிந்து விடக்கூடாது என்று பயந்து அந்தப்பெண் புகார் அளிக்காமல் இருந்துள்ளார்.
அதேபோல் மே மாதம் 19 ந்தேதி அன்று வண்டலூர் பகுதியில் காரில் நெருக்கமாக இருந்த காதல் ஜோடிகளை வீடியோ எடுத்து அவர்களிடமும் போலீஸ் என கூறி நகைகளை வாங்கி சென்றுள்ளான். இதே போல வண்டலூர் உயிரியல் பூங்கா, மகாபலிபுரம், உட்பட என ஐந்து இடங்களில் அடுத்தடுத்த நாட்களில் சுமார் 50 சவரன் நகைகளை போலீஸ் என கூறி அந்த மர்ம ஆசாமி பறித்துச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.
சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பைபாஸ் கொள்ளையன் வேறுயாருமல்ல கடந்த பத்து வருடங்களாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளையன் சிவராமன் என்பதை கண்டு பிடித்தனர். பள்ளிக்கரணை பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கி ஜெயிலில் அடைக்கப்பட்ட அவன் ஏப்ரல் 13 ந்தேதி தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளான்.
கொள்ளையன் சிவராமனை தேடி கடலூர் , புதுச்சேரி, பெங்களூரு சென்று வந்த போலீசார் , நன்மங்கலத்தில் மாமியார் வீட்டில் பதுங்கி இருந்தவனை கைது செய்தனர். அவன்மீது சுமார் 41 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், செயின் பறிப்பில் வரும் நகைகளை விற்று புதுச்சேரி மற்றும் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி மதுபோதையில் பெண்களுடன் உல்லாச வாழக்கை வாழ்ந்ததாக சிவராமன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பைபாஸ் கொள்ளையன் சிவராமனிடம் இருந்து ஒரு பல்சர் இருசக்கர வாகனம் 25,சவரன் தங்க நகைகள் மற்றும் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்தனர்.