சென்னையில் 21 வயது பெண் ஒருவர் 9 வயது முதல் தனது உறவினர்கள், அவர்களது நண்பர்கள் மற்றும் காப்பகத்தில் உள்ளோரால் , தனக்கு நடந்த அத்துமீறல் கொடுமைகள் குறித்து திடுக்கிட வைக்கும் புகார் ஒன்றை காவல் துறையில் அளித்துள்ளார். தாய் உள்ளிட்ட 12 பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சென்னை இராயபுரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் சார்பில், இராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட பாலியல் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள், அவர் சிறுமியாக இருந்த போது அனுபவித்த சித்ரவதைகளை 13 வருடம் கழித்து காவல்துறையின் காதுகளுக்கு எட்டவைத்துள்ளது.
அந்த பெண் 9 வயது சிறுமியாக இருந்த போது கடந்த 2009ஆம் ஆண்டு அவரது தந்தை இறந்துவிட்டதால் பள்ளிப்படிப்பை நிறுத்திய அவரது தாய், தனது உறவினர் தேசப்பன் வீட்டில் அவரை வளர்க்க விட்டுள்ளார். அந்த உறவினர் அவரிடம் ஆபாச படங்களை காண்பித்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து அந்த உறவினரின் மனைவியிடம் தெரிவித்த போது தனது கணவர் குறித்து வெளியில் சொல்லி விடக்கூடாது என்று, சிறுமியாக இருந்த தன் மீது மிளகாய்பொடியை தூவி அந்த ராட்ஷசி சித்ரவதை செய்ததாக, இளம்பெண் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
வலிதாங்காமல் உறவினர் வீட்டில் இருந்து தப்பித்து ஓடிச்சென்று காப்பகம் ஒன்றில் தஞ்சம் அடைந்த அந்த சிறுமி அங்கேயே 8ஆம் வகுப்புவரை படித்துள்ளார். தனது மகள் காப்பகத்தில் இருப்பதை அறிந்த தாய், போலீஸ் காரர் கோவிந்தன் என்பவர் மூலம் சிறுமியை மீட்டு மீண்டும் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். சிறுமி பூப்பெய்தி தகவல் அறிந்த அதே உறவினர் தேசப்பன், சிறுமியின் வீட்டிற்கு வந்து அத்துமீறி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தனது கூட்டாளிகள் சிவா, சீனிவாசன், ரமேஷ் ஆகிய 3 பேரை அழைத்து வந்து சிறுமியை சீரழித்துள்ளான். அவர்களது அத்துமீறல் குறித்து தாயிடம் கூறிய போது இது எல்லாம் தவறில்லை என்பது போல வக்காலத்து வாங்கிய நிலையில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதையடுத்து எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச்சென்ற தாய், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
இவர்களின் அத்துமீறலுக்கு பயந்து மீண்டும் வீட்டில் இருந்து தப்பித்து புரசைவாக்கம் பகுதியில் உள்ள காப்பகம் ஒன்றில் தஞ்சம் அடைந்த சிறுமி அங்கிருந்த குழந்தைகள் நல குழு உறுப்பினரான இசபெல், ஃபாத்திமா, சுகந்தி, பிரசன்னா, அலெக்ஸ் ஆகியோரிடம் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுத்ததோடு அலெக்ஸும் சிறுமியிடம் அத்துமீறியதாகவும், பலமுறை முயன்றும் தனக்காக குரல் கொடுக்க எவரும் இல்லாத நிலையில் தற்போது கிடைத்த ஆதரவு குரலால் நம்பிக்கையோடு போலீசில் புகார் அளித்ததாக அந்தப்பெண் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அந்த சிறுமியின் தாய், உறவினரான தேசப்பன், அவரது மனைவி ரேவதி, கூட்டாளிகள் சிவா, சீனிவாசன், ரமேஷ், காப்பக் நிர்வாகி இசபெல், ஃபாத்திமா, சுகந்தி, பிரசன்னா, அலெக்ஸ் ஆகிய 12 பேர் மீது போக்சோ உள்ளிட்ட 10 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சிறுமியின் தாய், தேசப்பனின் மனைவி ரேவதி காப்பக் நிர்வாகி இசபெல் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ள போலீசார் இதில் தொடர்புடைய மற்றவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 21 வயதாகும் நிலையில் கடந்த 13 வருடங்களாக தனக்கு நடந்த கொடுமைகளுக்கு காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஆறுதல் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.