சென்னை பூந்தமல்லியில் உயர் மின்னழுத்த கம்பி மீது கண்ட்டெய்னர் லாரி உரசியதில் மின் தாக்குதலுக்கு உள்ளான ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடலில் தீப்பற்றி உயிரிழந்தார்.
குஜராத்தில் இருந்து சென்னை செங்குன்றத்துக்கு கர்நாடக பதிவெண் கொண்ட கண்ட்டெய்னர் லாரி ஒன்று சென்றது. லாரியை மணிகண்டன், செல்வம் என 2 பேர் மாறி, மாறி ஓட்டி வந்துள்ளனர்.
புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தவர்கள் வழி தெரியாமல் பூந்தமல்லி நகருக்குள் நுழைந்துள்ளனர். மீண்டும் செங்குன்றம் நோக்கிச் செல்வதற்காக லாரியைத் திருப்பியபோது, கல்லறை பேருந்து நிறுத்தம் அருகே தாழ்வாகச் சென்ற மின் கம்பி மீது கண்ட்டெய்னரின் மேற்பகுதி உரசியுள்ளது.
அதில் லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனையறியாமல் லாரியை நிறுத்திவிட்டு, கதவைத் திறந்துகொண்டு மணிகண்டன் இறங்க முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி கூச்சலிட்டுக் கொண்டே கீழே விழுந்தவரின் உடல் தீப்பற்றி எரிந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். உலோக பகுதிகளைத் தொடாமல் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த செல்வம், மின் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.