சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்திவிட்டு, திருமண கோஷ்டி போல வேடமிட்டு, தமிழ்நாடு அரசுப் பேருந்தில் ஆந்திராவில் இருந்து திரும்பிய கும்பலை போலீசார் சுற்றிவளைத்தனர். இதில் 32 பேர் காட்டிற்குள் இறங்கி தப்பிச்சென்ற நிலையில், அரசுப் பேருந்தை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திர போலீசுக்கு தண்ணி காட்டிய கும்பல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
புஷ்பா படம் வருவதற்கு முன்பாகவே சேஷாசலம் வனப்பகுதியில், பல்வேறு செம்மர கடத்தல் சம்பவங்கள் நடந்து இருந்தாலும், தமிழ்நாடு அரசுப் பேருந்தை வாடகைக்கு அமர்த்தி செம்மரம் வெட்டச் சென்ற தமிழகத்தை சேர்ந்த 32 புஷ்பராசாக்கள் ஆந்திரா போலீசுக்கு தண்ணி காட்டி உள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பேருந்து ஒன்று திருப்பதியில் இருந்து பயணிகளுடன் திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. திருப்பதி -சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது அதில் பயணித்து கொண்டிருந்தவர்கள் தங்கள் திருமண கோஷ்டி என்றும் திருப்பதியில் திருமணம் முடிந்து ஊருக்கு திருபிச் செல்வதாகவும் , பெண்ணும் மாப்பிள்ளையும் வேறு ஒரு வாகனத்தில் வருவதாகவும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
போலீசார் அவர்களை பேருந்தை விட்டு இறங்கச்சொன்னதும் அதில் இருந்த 36 பேரும் திடீரென்று பேருந்தில் இருந்து வாசல் வழியாகவும், ஜன்னல் வழியாக தாவிக்குதித்தும் தப்பிச்சென்று அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் ஓடி தலைமறைவானதாக கூறப்படுகின்றது
அந்த அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்தினரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் அனைவரும் செம்மரம் வெட்டும் தொழிலாளர்கள் என்பதும் செம்மரத்தை வெட்டிக் கொடுத்து விட்டு, சந்தேகத்திற்கு இடமின்றி தப்பிச்செல்வதற்காக அரசுப் பேருந்தை வாடகைக்கு அமர்த்தி தப்பிச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களை ஏற்றி சென்றதாக தமிழ்நாடு அரசு பேருந்தை பறிமுதல் செய்த சந்திரகிரி போலீசார்,பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்தக்கும்பல் எந்த பகுதியில் மரங்களை வெட்டினர் என்பது குறித்து விவரங்களை தெரிந்து கொள்வதற்காக தப்பி ஓடியவர்களை சுற்றிவளைக்க காட்டுப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகின்றது.