மதுரையில் கிரிப்டோ கரன்சியில் பணத்தை முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரராகலாம் என்று, சதுரங்கவேட்டை பாணியில் கோட்டுப் போட்டு ஆசையைத் தூண்டிய கும்பல் ஒன்று, சாமர்த்தியமாக கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த பாண்டிக்கருப்பன் என்ற ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியின் மனைவி கோமதி. இவர் சேலை விற்பனை மற்றும் சுய உதவிக் குழு நடத்தி வந்துள்ளார்.
அவரை அணுகிய மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை என்ற குடும்ப நண்பர், கோமதியிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் நல்லா லாபம் கிடைக்கும், ஒரே மாதத்தில் கோடீஸ்வரி ஆகி விடலாம் எனவும், பிட்காயினில் ஆரம்பத்தில் 8ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து உறுப்பினராவதோடு, மல்டிலெவல் மார்க்கெட்டிங் பாணியில் புதிய உறுப்பினர்களையும் இணைத்துவிட்டால் சில மாதங்களில் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுவதோடு பி.எம்.டபிள்யூ கார் போன்ற ஆடம்பர கார்கள் கிடைக்கும் என ஆசைவார்த்தை அள்ளிவிட்டுள்ளார்.
இதனையடுத்து மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பிரபல தங்கும் விடுதியில், கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் தலைவர் கோட்டு கந்தசாமி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் 200 பேர் கலந்து கொண்ட நிலையில், அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 4ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு, டுபாக்கூர் ஐடி ஒன்றைக் கையில் கொடுத்துள்ளனர்.
அத்தோடு அவர்களை அழைத்துச்சென்ற கோமதிக்கு தெம்பூட்டும் விதமாக, அனைவரது முன்னிலையிலும் 50 ரூபாய் சால்வை ஒன்றை அணிவித்து, ஆம்வே பாணியில் மதுரையின் டாப்பர் இவர் தான் என்று தலையில் ஐஸ் வைத்து அனுப்பி உள்ளனர்.
முதல் உறுப்பினராக இணைந்துள்ளதால் 5லட்சம் ரூபாய் செலுத்தினால் உடனடியாக அதற்குரிய கிரிப்டோ கரன்சியை தருவதாக ஆசைவார்த்தை கூறியதை நம்பி, அந்த கும்பலிடம் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார் கோமதி.
அதனை பெற்றுக் கொண்ட அந்த கும்பல் வாங்கிய பணத்துக்கு கிரிப்டோ கரண்ஸியைக் கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர். இதேபோன்று பலரிடமும் பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததோடு, ஒரு கட்டத்தில் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக கோமதி உள்ளிட்ட சிலர் மீது கிரிப்டோ கரன்ஸி கில்லாடிகள் புகார் அளித்ததாகவும் கூறப்படுகின்றது.
இதையடுத்து கிரிப்டோகரன்ஸி மோசடிக் கும்பலிடம் பணத்தை ஏமாந்த கோமதி உள்ளிட்டோர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான கோட்டு கந்தசாமி தனது சகாக்களுடன், கிரிப்டோ கரன்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறி, மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் திடீர் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
பாதிக்கப்பட்ட கோமதி மற்றும் சில பெண்கள் கந்தசாமியை மடக்கி பணத்தைக் கேட்க முயன்றதால், விழிப்புடன் அங்கிருந்து காரில் ஏறி தப்ப முயன்றனர். செய்தியாளர்கள் தடுத்து நிறுத்திக் கேட்ட போது, தங்களிடம் பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இருந்தால் போலீசில் புகார் கொடுக்கட்டும்- வழக்கை சந்திக்கத் தயார் என அசால்ட்டாக கூறிச் சென்றனர்.
சதுரங்க வேட்டை காந்தி பாபு போல உறுப்பினர் கூட்டத்தில் வாக்குறுதிகளை அள்ளி விட்ட, கோட்டு கந்தசாமி கடைசிவரை வாய்திறக்கவே இல்லை..! குறுக்கு வழியில் செல்வந்தர்களாக ஆசைப்பட்டால் உள்ளதையும் மோசடி ஆசாமிகளிடம் பறிகொடுத்துவிட்டு பதறும் நிலைதான் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!