திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இரு சக்கர வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளான டி.வி.எஸ் ஜூபிட்டர் வண்டிக்கு சர்வீஸ் கட்டணமாக 58 ஆயிரம் ரூபாய் கேட்டதால், விபத்தில் தனது உறவினரைப் பறிகொடுத்த பெண், பெட்ரோல் கேனுடன் ஷோரூம் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா. இவர் 2020 ஆம் ஆண்டில் டிவிஎஸ் இதயம் எஜென்ஸியில் 86 ஆயிரம் ரூபாய் கொடுத்து புதிய வண்டியை வாங்கி உள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருப்பூரில் ஓட்டல் வேலைக்கு புறப்பட்டுச் சென்ற உறவினரான பாரூக் முகமது என்பவர் இவரது ஜூபிட்டர் வண்டியை இரவல் வாங்கிச்சென்றுள்ளார். ஒட்டன் சத்திரம் அருகே எதிரே வந்த ஸ்பிளண்டர் பைக்கில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பாரூக் முகமது பலியானார்.
இந்த விபத்தில் சேதமடைந்த ஜூபிடர் வாகனம் சர்வீஸுக்காக இதயம் ஏஜென்ஸியிடமே ஒப்படைக்கப்பட்டது. பல நாட்களாக உதிரி பொருட்கள் வரவில்லை என்று இழுத்தடித்த நிர்வாகத்தின் மந்தமான நடவடிக்கை பிடிக்காததால் சிறிய அளவிலான சேதமேயாயிருந்த அந்த வாகனத்தை அப்படியே தன்னிடம் கொடுத்து விடும் படி சேக் அப்துல்லாவும் அவரது மனைவி ஆயிஷா பானுவும் கேட்டுள்ளனர்.
ஆனால் 8 மாதங்களாக இழுத்தடித்த சர்வீஸ் மையத்தினர் இறுதியாக வாகனத்தை சரி செய்து விட்டதாக கூறி 58,510 ரூபாய்க்கு மிக நீண்ட பில் ஒன்றை ஆயிஷா பானுவின்கையில் கொடுத்துள்ளனர். அந்த இருசக்கர வாகனத்திற்கு சோழா காப்பீடு நிறுவனத்தில் காப்பீடு உள்ள நிலையில் அதன் மூலம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே இழப்பீடாக கிடைக்கும் என கூறப்பட்டதாக கூறப்படுகிறது.
சிறிய அளவிலான சேதம் மட்டுமே அடைந்திருந்த தனது ஜூப்பிட்டர் வாகனத்திற்கு 58510 ரூபாய் சர்வீஸ் கட்டணம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பிய ஆயிஷாபானுவை அங்கிருந்த சிலர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனைக்கு ஆளான அவர், இதே ஷோரூமில் இருசக்கர வாகனம் புதிதாக வாங்கிய போது 86 ஆயிரம் ரூபாய் தான் ஆனது. தற்போது பழுது நீக்கியதற்கு 58 ஆயிரம் கேட்கிறார்களே என்று வேதனையுடன் சம்மந்தப்பட்ட ஷோரூம் முன்பு கையில் பெட்ரோல் கேனுடன் அமர்ந்து நீதி கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஷோரூம் மீது புகார் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து ஆயிஷா பானு போராட்டத்தை கைவிட்டு ஷோரூம் கிளை மேலாளர் மீது மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஷோரூம் தரப்பில் விளக்கம் கேட்ட போது அவர்கள் கருத்து கூற மறுத்து விட்டனர். அதே நேரத்தில் கார் சர்வீஸ் மையங்கள் மட்டுமல்ல சில இரு சக்கர வாகன சர்வீஸ் மையங்களும் தங்களிடம் புதிதாக வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களை பணம் காய்க்கும் மரங்களாகவே கருதுகின்றன என்ற வாகன ஓட்டிகளின் குற்றஞ்சாட்டிற்கு இந்த சர்வீஸ் சம்பவமே சாட்சி..!