சென்னை கொருக்குபேட்டையில் ரெயில் பயணிகளிடம் நடக்கின்ற செல்போன் பறிப்பு சம்பவத்தை தடுக்க ரெயில் தண்டவாளத்தில் துப்பாக்கியுடன் ரோந்து சென்ற மத்திய பாதுகாப்புபடை போலீசாரிடம் , அங்கு அமர்ந்து மது அருந்திய இளைஞர்கள் வம்பிழுத்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் அனைத்தும் பேசன் பிரிஜ் கொருக்குப்பேட்டை நாராயணபுரம் வழியாக செல்லும் வழித்தடத்தில் செல்கின்றன வெளிமாநிலங்கள் செல்லும் விரைவு ரயிலில் மிக வேகம் குறைவாக செல்வதால் படிக்கட்டில் செல்போனை வைத்துக் கொண்டு பயணிக்கும் ரயில் பயணிகளிடம் மர்ம நபர்கள் செல்போனை கம்பால் அடித்து பறித்துச் செல்வது நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகின்றது.
இதன் காரணமாக அந்த வழிதடத்தில் உள்ள தண்டவாளத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் கையில் துப்பாக்கியுடன் தினமும் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
அந்தவகையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தண்டவாள ரோந்து பணியில் ஈடுபட்ட போது கொருக்குப்பேட்டை பெஜவாடா லைன் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து 5 இளைஞர்கள் மது குடித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது.
இதனை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரயில்வே போலீசார் எச்சரித்து விரட்டியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த போதை இளைஞர்கள் அவர்களது உறவினர்களை அழைத்து வந்து ரயில்வே போலீசார் மீது கல்வீசி தாக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் ஹிந்தியில் பேசி, அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டனர்
சில இளைஞர்கள் அருகில் இருந்த ரெயில்வேக்கு சொந்தமான அலுவலகத்தின் பூட்டப்பட்ட இரும்பு கதவை அடித்து ரகளையில் ஈடுபட்டனர்
இளைஞர்களுடன் வந்த பெண்களில் சிலர் அந்த போதை இளைஞர்களை இழுத்துச்சென்றதால் அங்கு நடக்க விருந்த விபரீத மோதல் தடுக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை போலீசாருக்கும் மற்றும் தமிழக ரயில்வே போலீசாரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.