நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், எந்த லைசென்ஸும் பெறாமல் தனி நபர்களோ நிறுவனங்களோ, பொது சார்ஜிங் மையம் அமைக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளது.
இதன் மூலம் வர்த்தக ரீதியான மின் இணைப்புக்கு மாறாமல், வீடு அல்லது அலுவலகத்தில் தற்போதைய இணைப்பிலேயே, மின்வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்களை அமைக்கலாம்.
இதனால், மின்சார வாகன உரிமையாளர்கள் வீடுகளுக்கான மின் கட்டணத்திலேயே சார்ஜிங் செய்து கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்வதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் தர நெறிமுறைகளை, மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு நிலத்தில் வருவாய் பகிர்வு அடிப்படையில், அரசு அல்லது பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், இத்தகைய பொது சார்ஜிங் மையங்களை அமைப்பதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் உறுதியளித்தபடி, வாகனப் போக்குவரத்து துறையில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் இலக்கை நோக்கி முன்னேறும் வகையில், இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரிலையன்ஸ், டாடா பவர், ஓலா, இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், சிஇஎஸ்எல் போன்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்த, மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஊக்கமாக அமையும்.
எளிமையாக்கப்பட்ட விதிமுறைகளால் இத்துறை மீது தனிநபர்களும் ஏராளமான புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஈர்க்கப்படுவார்கள். இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதால், பஞ்சர் கடை போன்று பொது சார்ஜிங் மையங்கள் அதிகளவில் உருவாகி, மின்சார வாகனங்களுக்கு பொதுமக்கள் மாறுவதில் முக்கிய தடையாக உள்ள சார்ஜிங் மையங்கள் பிரச்னையை போக்கும்.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள்படி அடுத்த 3 ஆண்டுகளில், பெரிய நகரங்களில் 3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு பொது சார்ஜிங் மையமும், நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதிகளில், 25 கிலோ மீட்டருக்கு ஒரு பொது சார்ஜிங் மையமும் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநிலத் தலைநகரங்கள் மற்றும் அதை இணைக்கும் நெடுஞ்சாலைகளில், இந்த வசதி அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்கான புதிய நெறிமுறைகளின்படி, 10 ஆண்டு கால வருவாய் பகிர்வு ஒப்பந்தத்தின் பேரில், அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்கள், இத்தகைய மையங்களை அமைக்க, ஒரு யூனிட் மின்சார சார்ஜிங் கட்டணத்தில் தலா ஒரு ரூபாய், என்ற வருவாய் பங்களிப்பு அடிப்படையில், அரசு நிலத்தை ஒதுக்கீடு பெறலாம்.
ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு இதே கட்டண அடிப்படையில், அரசு நிலம் ஏலத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.