சென்னை பம்மலில் மாப்பிள்ளை பார்க்க வந்தது போல் நடித்து கவனத்தை திசை திருப்பி தங்க நகையை அபேஸ் செய்து தப்பிய 87 வயதான பிரபல திருடன் சில்வர் சீனிவாசனை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலரான சந்தானம், தனது உறவினர் சீனிவாசனின் மகனுக்கு வரன் வேண்டும் என பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து விட்டு முதியவர் ஒருவர் சந்தானத்தை அணுகி உள்ளார். சந்தானமும் அவரை பம்மலில் உள்ள தனது உறவினர் சீனிவாசன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அனுப்பி வைத்துள்ளார்.
அந்த வீட்டிற்கு சென்ற முதியவர், தன் மகள் வங்கியில் வேலை பார்கிறார் என்றும் பல்வேறு வசதிகள் உள்ளது என அடுக்கடுக்கான பொய்களை கூறி குடும்பத்தினருடன் நெருக்கமாகி உள்ளார். தனக்கு நன்கு ஆருடம் பார்க்க தெரியும் என்று கூறிய முதியவர், மாப்பிள்ளை ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், தோஷம் கழிய விசேஷ பூஜை செய்தால் மணமக்கள் வாழ்வில் நல்ல பயன் கிடைக்கும் என கூறியுள்ளார்.
பூஜைத் தட்டில் ஐஸ்வர்யம் வைக்க வேண்டுமென கூறிய முதியவர், 14 கிராம் தங்க நகையை வைத்து பூஜை செய்து அதை ஜாதகத்தால் மூடி 3 நாட்களுக்கு பின் எடுக்க வேண்டும் என்று கூறியதால், அவர்களும் வைத்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் பூஜை தட்டை பார்த்த வீட்டாருக்கு நகை காணாமல் போய் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் மாப்பிள்ளை பார்ப்பது போல் வந்து கைவரிசை காட்டிச் சென்றது பிரபல திருடன் சில்வர் சீனிவாசன் என்பது தெரியவந்தது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வரும் சில்வர் சீனிவாசன், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத சின்னச் சின்ன திருட்டு, திருடிய பொருட்கள் மற்றும் திருடிய இடம் குறித்து டைரியில் ரெக்கார்ட் மெயிண்டெயினிங்க் செய்வது என மற்ற திருடர்களிடம் இருந்து தனித்துக் காட்டி கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர் என போலீசார் கூறினர்.
ஏறத்தாழ 225 திருட்டு வழக்குகள் சீனிவாசன் மேல் உள்ளதாகவும், ஆரம்ப காலத்தில் ஜோஷியம் கூறுவது போல் சென்று வெள்ளிப் பொருட்களை திருடி வந்ததால் சில்வர் சீனிவாசன் என அடைமொழியுடன் கூடிய பெயர் உருவானதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மற்றவர்களை எளிதில் கவரும் வசீகர பேச்சை வைத்து திருட்டுச் செயல்களில் ஈடுபடும் சில்வர் சீனிவாசன், 2018-ஆம் ஆண்டு மயிலாப்பூரில் ஒரு திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்று வந்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கைவரிசையை காட்டி உள்ளதாக போலீசார் கூறினர். ஏறத்தாழ 90 வயதை நெருங்கி தலைமுறைகள் தாண்டி திருடி வரும் சரித்திர பதிவேடு திருடன் சில்வர் சீனிவாசனை போலீசார் தேடி வருகின்றனர்.