புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஆடுவதற்கு பாலிவுட் நடிகை சன்னிலியோனை அழைத்து வருவதாக கூறி ரசிகர்களிடம் தலா 5000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் , நீதிமன்ற உத்தரவுப்படி சன்னிலியோன் ஆடுவதற்கு தடைவிதிக்கப்பட்டதால் டிக்கெட் எடுத்தவர்கள் ஏமாற்றத்துடன் புத்தாண்டை கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
புதுச்சேரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடற்கரை சாலை பழைய துறைமுகத்தில் படகு குழாம் பேரடைஸ் பீச் மற்றும் தனியார் உணவு விடுதிகள் உட்பட 45 இடங்களில் புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் தனியார் நிறுவனங்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
அதன் ஒரு பகுதியாக பழைய துறைமுகப் பகுதியில் கமர் பிலிம் ஃபேக்டரி மற்றும் lololand ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமான பாலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்து சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
சன்னிலியோனின் ஆட்டத்தை காண்பதற்கு கட்டணமாக 2500 ரூபாய் தொடங்கி முன் வரிசையில் அமர்வதற்கு 5000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சன்னிலியோனை பார்க்கும் ஆவலில் ஏராளமானோர் 5000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியதாக கூறப்படுகின்றது.
இதற்க்கிடையே சன்னிலியோனை வரவைத்து ஆபாச நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை கண்டித்து தமிழர் களம் அமைப்பினர் போராட்டத்தை முன்னெடுத்தனர், தமிழக வாழ்வுரிமை கட்சியும் போராட்டம் நடத்தியது
பிரபலங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் சன்னி லியோன் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் கோவா சென்றுள்ளதாகவும் கூறப்பட்டதால் காசு கொடுத்து காத்திருந்த இலவு காத்தகிளிகள் கடுமையான ஏமாற்றத்துக்குள்ளாயினர். இந்த நிகழ்ச்சி மூன்று நாள் நடத்தப்பட உள்ளதால் சனிக்கிழமை சன்னி லியோன் கலந்து கொள்வார் என்று ரசிகர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமாதனப்படுத்தினர்
தென்னிந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் இதற்கு அனுமதி அளித்து பல்வேறு பிரபலங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிரபலங்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளாததால் புத்தாண்டு கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வழக்கம் போல இளமை இதோ.. இதோ பாட்டுக்கு நடனம் ஆடிவிட்டு வீட்டை நோக்கிச்சென்றனர்.
ஒரு வேளை சன்னிலியோன் சனிக்கிழமையும் வரவில்லை என்றால் தாங்கள் கொடுத்த 5 ஆயிரம் ரூபாய் திரும்ப கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்துடனேயே பலர் அங்கிருந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.