சினிமா துணை நடிகைகளுடன் பிரபல தொழில் அதிபர் ஒருவர் ஒன்றாக இருப்பது போன்ற சித்தரிக்கப்பட்ட வீடியோவை காட்டி பிளாக் மெயில் செய்து 50 லட்சம் ரூபாயை பறித்த பைனான்சியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். மதுவால் மயங்கிய தொழில் அதிபருக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
சென்னையை பாண்டிபஜாரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜா. திருச்சியில் ஷாப்பிங் மால், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் சூப்பர் மார்கெட் விற்பனை நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான ராஜாவின் தந்தை ராமனின் பெயரை பாண்டி பஜார் பகுதியில் ஒரு தெருவுக்கு சூட்டியுள்ளனர்.
இவ்வளவு செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா, மதுப்பழக்கத்தால் அறிமுகமான கூடா நட்பால் ஆபாச வீடியோவில் சிக்கி சித்தரவதைக்குள்ளானதாக கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
கடந்த 2016-ம் ஆண்டு கரூரைச் சேர்ந்த பைனான்சியர்கள் ரமேஷ் மற்றும் கார்த்திக் இருவரும் தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராஜாவிற்கு அறிமுகமாகியுள்ளனர். இவர்கள் இருவரும் பைனான்ஸ் தொழில் செய்து வருவதாகவும் அதிகப்படியாக பணம் வருவதால் ஜாலியாக செலவு செய்வதை வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் தொழிலதிபரான ராஜாவிடம் கூறி பழகியுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக இவர்களது நட்பு தொடர்ந்து வரும் நிலையில், தொழிலதிபர் ராஜாவிற்கு மாதம் தோறும் பல கோடி ரூபாய் வருமானம் வருவதை தெரிந்து கொண்ட ரமேஷ் மற்றும் கார்த்திக், ராஜாவை குறிவைத்து சிக்க வைக்க வேண்டும் என்று நீண்ட நாளாக திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பிறந்தநாள் பார்ட்டி ஒன்றிற்கு தொழிலதிபர் ராஜாவை ரமேஷ் மற்றும் கார்த்திக் வரவழைத்துள்ளனர். அந்த பார்ட்டியில் பிரபல நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் பார்ட்டியில் ராஜாவிற்கு அதிக அளவில் மது பரிமாறி அருந்த வைத்துள்ளனர். மது போதை அதிகமானதால் ராஜாவை நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்க வைத்துள்ளனர்.
பார்ட்டியில் பங்கேற்ற சில துணை நடிகைகளை தங்களது தோழிகள் என அறிமுகம் செய்துவைத்த ரமேஷ் மற்றும் கார்த்திக், ராஜா தங்கியிருந்த அறைக்கு அந்த பெண்களை வரவழைத்து, அதிக மதுபோதையில் இருந்த ராஜாவுடன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ எடுத்ததாக கூறப்படுகின்றது
இதனையடுத்து செப்டம்பர் மாதம் ஒருநாள் ரமேஷ் மற்றும் கார்த்திக் ராஜாவிற்கு போன் செய்து, பெண்களுடன் உள்ள ஆபாச படம் மற்றும் வீடியோக்களை குடும்பத்தினரிடம் காண்பித்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளனர். மேலும், தங்களுக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் தரவில்லை என்றால் உடனடியாக இணையதளத்தில் வெளியிடுவதாக பிளாக்மெயில் செய்துள்ளனர்
நண்பர்களாக பழகியவர்கள் செய்த துரோகத்தால் அதிர்ச்சி அடைந்த ராஜா, இவர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என அச்சம் அடைந்து 50 லட்சம் ரூபாய் பணத்தை தயார் செய்து வைத்திருப்பதாகவும் அதை வந்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ரமேஷின் ஓட்டுநர் மோகன் என்பவர் பணத்தை பெற தியாகராய நகரில் உள்ள ராஜா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ராஜா சமயோசிதமாக அவரது செல்போனில் பணம் கொடுக்கும் காட்சிகளை வீடியோ எடுத்துத்துள்ளார்.
அதன் பின்னரும் அடங்காத இரண்டு பேரும், தங்களுக்கு மேலும் இரண்டரை கோடி ரூபாய் பணம் வேண்டும் என கேட்டு அந்த வீடியோக்களை காட்டி மிரட்ட தொடங்கி உள்ளனர். இதனால் பதற்றமடைந்த ராஜா இதற்கு மேல் பொறுக்கமுடியாமல் காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி இந்த பிளாக்மெயில் சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராஜா கொடுத்த வீடியோ ஆதரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் பிளாக்மெயில் பைனான்ஸியர்கள் ரமேஷ் மற்றும் கார்த்திகை சென்னையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜாவிடம் இருந்து பறித்துச்சென்ற 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மது போதையில் சுய நினைவின்றி படுத்திருந்த தன்னை சம்பந்தப்பட்ட நடிகைகளுடன் ஒன்றாக இருப்பது போன்று மார்பிங் மூலம் சித்தரித்து உள்ளதாக ராஜா கூறியுள்ள நிலையைல் இந்த பிளாக்மெயிலர்ஸ் வேறு பாரிடமெல்லாம் இது போன்ற பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.