சென்னையில் உள்ள பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள் பயன்படுத்த இயலாத வகையில் இருப்பதால், அவசரத்துக்கு ஒதுங்கக் கூட இடமில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைகாலம் நெருங்கும் நேரத்தில், தொற்றுநோய் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய, முதல் முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
ஏதோ லாக்கர் கதவை திறந்து கட்டுக்கட்டாக பணத்தை எடுக்கப் போராடுகிறார் என்று தவறாக நினைத்து விட வேண்டாம், சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அவசரத்துக்குச் சென்றுவர அமைக்கப்பட்டுள்ள மின்னணுக் கழிவறைக் கதவுகள், பட்டனைத் தட்டியும் திறக்கப்படவில்லை, இழுத்துப் பார்த்தும் பயனில்லை, வெறும் காட்சிப் பொருளாக உள்ளது..!
சென்னையில் 807 பொதுக் கழிவறைகள், 140 மின்னணுக் கழிவறைகள் என மொத்தம் 947 கழிவறைகள் மக்கள் பயன்பாட்டிற்கு உள்ளதாக மாநகராட்சி தெரிவிக்கின்றது. அவற்றைப் பராமரிக்க போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை என்பதாலும், பொதுக்கழிவறையைப் பராமரிக்க ஒப்பந்தங்கள் வழங்கப்படாததாலும் பெரும்பாலான கழிப்பறைகள் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை.
பெரும்பாலான கழிப்பறைகளில் தண்ணீர் வருவதில்லை, தண்ணீர் வந்தால் அங்கே வாளியோ, கோப்பையோ இருப்பதில்லை, அப்படியே இருந்தாலும் அவற்றைக் கையால் தொட இயலாத அளவிற்கு அழுக்குப் படிந்து காணப்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கிண்டி, அடையாறு பகுதிகளில் உள்ள மரங்களுக்கு பின்னால் அவசரத்துக்கு ஒதுங்கும் நகரவாசிகள், சென்ட்ரல், அண்ணாசாலை போன்ற மரங்கள் இல்லா சாலைகளில், அவசரத்துக்கு ஆளில்லா குறுக்கு சந்துகளைத் தேடி அலையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலர் சமூக அக்கறையுடன் கழிவறையை தேடிச்சென்றால் 10 அடிக்கு முன்பே காற்றில் பரவிக்கிடக்கும் துர்நாற்றம் அதனைத் தவிர்க்கச் செய்கின்றது.
எப்போதும் கூட்ட நெரிசலால் நிரம்பி வழியும் பிராட்வே மார்க்கெட் பகுதியில் அவசரத்துக்கு உருப்படியான கழிப்பறை இல்லாததால், அங்கு செல்வோர் பலரும் வெட்கத்தை விட்டு பொதுவெளியில் சுவற்றுப்பக்கம் தயங்காமல் ஒதுங்குகின்றனர்.
ஆண்கள் எளிதாக அவசரத்துக்கு பொதுவெளியில் ஒதுங்கினாலும், பெண்களின் நிலை தான் கொடுமையிலும் கொடுமை..
இப்படி அவதிப்பட்டு சிறுநீர் கழிப்பதை அடக்கி வைத்தால், கிட்னியில் கல் சேர வழிவகுத்து விடும் என்று சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், பெண்களுக்கு இது பெரிய அளவிலான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, மழைக்காலத்தில் வீதியில் தேங்கும் மழை நீரில் கலந்து எளிதாக தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால், ஸ்மார்ட் சிட்டி என்ற புதிய அடையாளத்தை பெறும் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அதிகாரிகளும் விரிவான ஆய்வு மேற்கொண்டு அனைத்து கழிவறைகளையும் தூய்மைப்படுத்தி சுகாதாரமாக மக்கள் பயன்பாட்டுக்கு மீட்டுக்கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது..!