சென்னை தண்டையார்பேட்டையில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்காக பள்ளம் தோண்டியபோது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய தொழிலாளி 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தாண்டவராயன் தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் சீதா கண் மருத்துவமனைக்காக மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதற்காக பள்ளம் தோண்டும் பணியில் வீரப்பன் ஆகாஷ் சின்னதுரை என 3 பேர் ஈடுபட்டிருந்தனர்.
சுமார் 15 அடி ஆழம் தோண்டிய நிலையில், திடீரென மண் சரிவு ஏற்பட்டு 3 பேரும் உள்ளே சிக்கிக் கொண்டனர். அக்கம்பக்கத்தினரால் வீரப்பனும் ஆகாஷும் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், பள்ளத்தின் ஆழத்தில் சிக்கிக்கொண்ட சின்னதுரையை மண் முழுவதுமாக மூடிக்கொண்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், காங்கிரீட் வளையங்களை பொருத்தி, பள்ளத்தைத் தோண்டி, 3 மணி நேரம் போராடி சின்னதுரையை மீட்டனர். முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.