டீக்கடையில், வாடிக்கையாளர்கள் மொபைல் மூலம் செலுத்தும் பணத்தை, வேறொரு கியூஆர் கோடு ஒட்டி தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க முயன்ற 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூம் போட்டு யோசித்து, நூதன மோசடியில் இறங்கிய நவீன திருடர்கள் சிசிடிவி மூலம் வகையாகச் சிக்கிக் கொண்டனர்.
சென்னையை அடுத்த கந்தன்சாவடியில், பழைய மாமல்லபுரம் சாலையில், துரை என்பவர் தேநீர் கடை மற்றும் சிறிய உணவகம் நடத்தி வருகிறார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், மொபைல் மூலம் பணம் செலுத்த வசதிக்காக, ‛க்யூஆர் கோடு’ ஸ்டிக்கர் கடையில் ஒட்டப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம், தன்னுடைய கணக்கிற்கு வராததால் சந்தேகமடைந்த துரை, வங்கியை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, பணத்தை கணக்கிற்கு வரவு வைப்பதில் ஏதும் பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளனர். உடனடியாக மொபைல் மூலம் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அது வேறொரு கணக்கிற்கு செல்வது தெரியவந்துள்ளது.
புகாரின்பேரில் துரைப்பாக்கம் போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். கடையை பூட்டிய பிறகு இரவு நேரத்தில் பைக்கில் வந்த இரண்டு பேர், ‛க்யூஆர் கோடு’ ஸ்டிக்கரை ஒட்டிச் சென்றது அதில் பதிவாகியிருந்தது.
விசாரணையில், பைக்கில் வந்து கியூஆர் கோடை ஒட்டிச் சென்றவர்கள், பெருங்குடி, கல்லுக்குட்டையை சேர்ந்த வல்லரசு , அடையாறு பகுதியை சேர்ந்த ராபர்ட் என்பது தெரியவந்தது. இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தபோது, வல்லரசு முன்னர் போன் பே நிறுவனத்தில் பணியாற்றி வேலையை விட்டு நின்றவன் என்று கூறப்படுகிறது.
வல்லரசு, தனது கூட்டாளிகள் ராபர்ட், சீனிவாசன் ஆகியோரோடு சேர்ந்து, க்யூஆர் கோடு ஸ்டிக்கர்களை பயன்படுத்தி புதிய மோசடியில் இறங்கியது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து எட்டு க்யூஆர் கோடு ஸ்டிக்கர் மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாகிவிட்ட சீனிவாசனை தேடி வருகின்றனர். வல்லரசு, ராபர்ட் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடைக்கு வெளியே கியூஆர் கோடு ஒட்டிவைத்திருப்பவர்கள் கவனம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.