சென்னையில் பணம் பறிக்கும் நோக்கில் தனக்குத் திருமணமானதை மறைத்து இளம் பெண்ணை காதலித்து வந்த ஒருவன், அந்தப் பெண்ணுக்கு விஷயம் தெரிந்ததும் சினிமா பாணியில் இரட்டைப் பிறவி நாடகம் அரங்கேற்றியுள்ளான். தான் ஒரு இரட்டைப் பிறவி என்பதை நம்ப வைக்க போலி ரேசன் கார்டு, போலி வாக்காளர் அட்டை வரை தயாரித்து நாடகம் நடத்திய போட்டோ ஷாப் காதலன் சிக்கியது எப்படி என விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவன் வில்லாண்டர் பென்னட் ராயன். இவனின் தாய் செலினா ராயன். போரூரிலுள்ள தனியார் மென் பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் வில்லாண்டர் பென்னட் ராயனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், தன்னுடன் பணியாற்றும் இளம் பெண் ஒருவருக்கு காதல் வலை விரித்துள்ளான் வில்லாண்டர் பென்னட் ராயன். கைநிறைய சம்பளம் வாங்கும் அந்தப் பெண்ணின் குடும்பமும் சற்று வசதியான பின்னணி கொண்டது என்று கூறப்படுகிறது.
இவர்களின் காதல் திருமணப் பேச்சு வரை வந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தமும் முடிந்திருக்கிறது. நிச்சயதார்த்தம் முடிந்த சில நாட்கள் கழித்து இளம் பெண்ணை போனில் அழைத்த வில்லாண்டரின் நண்பர் ஒருவர், அவனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்ற குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த இளம்பெண், வில்லாண்டரிடம் அதுகுறித்து கேட்டபோது, லேசாக தடுமாறிய அவன், பின்னர் சுதாரித்துக் கொண்டு தனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான் என்றும் தாங்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள் என்றும் சினிமா பாணியில் ஒரு கதையை அளந்துள்ளான். அண்ணன் பெயர் வில்சன் பெனட் ராயன் என்றும் தற்போது துபாயில் வேலை பார்ப்பதாகவும் கூறி, தனது மனைவியையே அண்ணனின் மனைவி என நம்பவைத்துள்ளான் வில்லாண்டர்.
படித்த பெண் என்பதால் அவர் எப்படியும் நம்பமாட்டார் என எண்ணி, போலி ரேஷன் கார்ட், போலி வாக்காளர் அடையாள அட்டை என அந்த அண்ணன் கேரக்டருக்கு போலியான ஆவணங்கள் மூலம் உயிர் கொடுத்துள்ளான் வில்லாண்டர். அத்தோடு நில்லாமல் தனது முந்தைய திருமண போட்டோ ஆல்பத்தில் தனது போட்டோவையே மார்பிங் செய்து இணைத்து அவரிடம் காண்பித்து, அதுதான் தனது அண்ணன் எனக் கூறியுள்ளான்.
அத்துடன் நில்லாமல், கமலின் பாபநாசம் பட பாணியில், தனது நெருங்கிய நண்பர்களுக்கு போன் செய்து, இந்த இரட்டை பிறவி நாடகத்தை அப்படியே "மெயிண்டெய்ன்" செய்ய உதவுமாறு கேட்டுள்ளான். அந்த நண்பர்களில் ஒருவர் நல்லவராக இருக்கப்போய், இவனது மோசடிக்குத் துணை போக முடியாது என மறுத்த ஆடியோ கிடைத்துள்ளது.
இதனிடையே திருமண செலவுக்கு எனக் கூறி, இளம் பெண்ணிடம் மூன்றரை லட்சம் ரூபாயை முதற்கட்டமாக வாங்கியுள்ளான் வில்லாண்டர். திருமணம் நெருங்கும் வேளையில் வில்லாண்டரின் உறவினர் ஒருவர் இளம் பெண்ணுக்கு அவனது முதல் திருமணம் பற்றி ஆதாரங்களுடன் எடுத்துக்கூறப் போய்தான் விஷயம் விஸ்வரூபமெடுத்தது. பாதிக்கப்பட்ட பெண் போலீசுக்குச் செல்ல, முதலில் அவர்கள் புகாரைப் பெறாமல் பணத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள் என எழுதிக் கொடுத்து சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் 3 மாதங்களுக்கும் மேலாக காவல் நிலையத்துக்கு நடையாக நடந்த அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளான் வில்லாண்டர். வேறு வழியின்றி பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகிய பிறகுதான் வில்லாண்டர் மீதும் அவனுக்கு உடந்தையாக இருந்த அவனது தாயார் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.
தனது இரட்டைப் பிறவி நாடகம் கலைந்து தாயுடன் தலைமறைவாக உள்ள வில்லாண்டர் சிக்கினால் மட்டுமே, இதே போன்று அவன் வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டிருக்கிறானா என்பது தெரியவரும்.